கொலம்பியாவில் குழந்தையின் உயிரைக்காப்பாற்றிய ‘ஹீரோ’ பூனை

267 0

கொலம்பியாவில் ஒரு வயதே ஆன குழந்தையின் உயிரை ஒரு பூனை காப்பாற்றி ‘ஹீரோ’வாகி இருக்கிறது.

உலகம் முழுவதும் பலர் தங்களது வீடுகளில் நாய், பூனை போன்றவற்றை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். அந்த வளர்ப்பு பிராணிகள் பல நேரங்களில் தங்களது எஜமானர்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்களின் உயிரை காப்பாற்றி தங்களது நன்றியை வெளிப்படுத்துகின்றன.

அப்படிதான் கொலம்பியாவில் ஒரு வயதே ஆன குழந்தையின் உயிரை ஒரு பூனை காப்பாற்றி ‘ஹீரோ’வாகி இருக்கிறது. தலைநகர் போகோடாவில் உள்ள ஒரு வீட்டில் அந்தக் குழந்தை அங்கும் இங்குமாக தவழ்ந்து விளையாடி கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த குழந்தை தவழ்ந்து மாடி படிக்கட்டுக்கு அருகே சென்றது.

அப்போது அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்த வீட்டின் செல்லப்பிராணியான பூனை பாய்ந்து வந்து, குழந்தையை பிடித்து தடுத்து நிறுத்தியது. மேலும் குழந்தையை எதிர்திசையில் வீட்டுக்குள் தள்ளிவிட்டு விட்டு மாடி படிக்கட்டு அருகிலேயே பூனை அமர்ந்துகொண்டது. இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

வீட்டின் உரிமையாளர் தனது குழந்தையின் உயிரைக்காப்பாற்றிய பூனையின் செயலை பாராட்டி அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.