அ.தி.மு.க.வில் சேர புகழேந்தி முடிவு

45 0

சேலத்தில் இன்று ஆதரவாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க.வில் சேர புகழேந்தி முடிவு செய்துள்ளார்.

அ.ம.மு.க.வில் செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்திக்கும், பொது செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து தினகரனுக்கு எதிராக புகழேந்தி கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

இதற்கிடையே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, புகழேந்தி சந்தித்து பேசினார். அப்போது இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்க முதல்வரை சந்தித்ததாக கூறினார். அப்போது அவர் விரைவில் அ.தி.மு.க.வில் இணைவார் என்ற தகவல் வெளியானது.

இந்த நிலையில் அ.ம.மு.க. எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைத்து சேலம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புகழேந்தி தலைமையில் சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் புகழேந்தியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் புகழேந்தி ஆலோனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வில் சேருவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

* நடந்து முடிந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்த தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், தோழமை கட்சியினர் அனைவருக்கும் இந்த நிர்வாகிகள் கூட்டம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றியை யும் தெரிவித்துக் கொள்கிறது.

* உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் டி.டிவி. தினகரனின் அரசியல் அவதாரம் முடிவுக்கு வந்து விடும். அ.ம.மு.க. காணாமல் போய் விடும். எனவே பதிவு பெறாத ஒரு சங்கத்தைப்போல டி.டி.வி. தினகரன் நடத்தி வரும் அ.ம.மு.க. என்னும் கம்பெனியை நம்பி இனி இளைஞர்கள் வீண்போக வேண்டாம்.

* டி.டி.வி. தினகரன் கழக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டபோது கழகத்தை காப்பாற்றுவார் என்று நம்பி அவர் பின்னால் அணி வகுத்தோம். ஆனால் டி.டி.வி. தினகரன் தனது சுயநலத்தாலும், ஆளுமை இன்மையாலும், நிர்வாக திறமையின்மையாலும் அவரது துணை பொதுச் செயலாளர் பதவியையும் காப்பாற்ற முடியவில்லை.

அவரை நம்பி அவர் பின்னால் சென்ற நிர்வாகிகளையும், தொண்டர்களையும் காப்பாற்ற முடியவில்லை. டி.டி.வி. தினகரன் மீது வைத்துள்ள நம்பிக்கையை முழுவதுமாக இழந்துவிட்ட நிலையில் பெரும்பாலான தமிழக மக்களின் விருப்பப்படி தமிழகம் முழுவதும் நம்மோடு இணைந்து பணியாற்றிய நிர்வாகிகளும், தொண்டர்களும் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட மாபெரும் இயக்கத்தையும், ஜெயலலிதா விட்டுச் சென்ற ஆட்சியையும் சீரோடும், சிறப்போடும் வெற்றிப்பாதையில் நடத்தி வருகின்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்று அனைவரும் அ.தி.மு.க.வில் இணைவது என இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.