தொடர்ந்து குற்றச்சாட்டுகளில் சிக்கும் ஹிலரி கிளிண்டன்

287 0

gettyimages-615161730அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களிடையே நடத்தப்படும் அதிகாரபூர்வ விவாதத்தில் ஹிலரி கிளிண்டனுக்கு ஆதரவாக செயல்பட்ட ஊடகவியலாளரை குறித்த நிறுவனம் நீக்கியுள்ளது.

அமெரிக்காவின் பிரபல செய்தி ஊடகம் நடத்திய விவாதத்தின்போது, ஹிலரி கிளிண்டனுக்கு ஆதரவாக இரண்டு முக்கிய கேள்விகளை முன்கூட்டியே வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் ஊடகவியலாளர் ஒருவரை அந்த நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.

பிரபல செய்தி ஊடகம் ஒன்றில் அரசியல் பிரிவு ஊடகவியலாளராக செயல்பட்டு வந்தவர் Donna Brazile.

இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறித்த ஊடகத்தில் இருந்து விலகிக் கொள்வதாக பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

ஆனால் குறித்த ஊடகவியலாளர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னரே அந்த நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெர்மான்ட் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ்கும் ஹிலரி கிளிண்டனுக்கும் இடையே நடைபெற்ற நேரடி விவாதத்தினை குறித்த ஊடக நிறுவனம் முன்னெடுத்து நடத்தியது.

அந்த விவாதத்தில் மரண தண்டனை மற்றும் பிளின்ட் பகுதியில் நிலவும் குடிதண்ணீர் நெருக்கடி ஆகிய இரண்டு கேள்விகளுக்கான பதிலை ஹிலரி கிளிண்டன் தயார் படுத்திக்கொள்ளும் பொருட்டு முன்கூட்டியே ஊடகவியலாளர் டோன்னா அவருக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை விக்கி லீக்ஸ் வெளிக்கொண்டு வந்ததை அடுத்து சுதாரித்துக் கொண்ட குறித்த செய்தி ஊடகம் டோன்னாவுக்கு எதிராக விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

அதில் குறித்த இரண்டு கேள்விகளை அவர் ஹிலரி கிளிண்டனுக்கு முன்கூட்டியே வழங்கியது உறுதி செய்யப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி நடைபெற்ற குறித்த விவாதத்தில் பார்வையாளர் பகுதியில் இருந்து பெண் ஒருவர் பிளின்ட் பகுதியில் நிலவும் குடிதண்ணீர் நெருக்கடி குறித்து கேள்வி எழுப்புவார் என்று டோன்னா மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து மறுதினம் 13ஆம் திகதி மரண தண்டனை குறித்து பார்வையாளர் ஒருவர் கேள்வி கேட்கலாம் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ்கு எதிராகவே இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் அக்டோபர் மாதம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது டோன்னா குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

ஊடகவியலாளர் Donna Brazile 1992 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களில் பில் கிளிண்டனுக்கு ஆதரவாகவும் ஆலோசகராகவும் செயல்பட்டார்.

மட்டுமின்றி கடந்த 2000ஆம் ஆண்டில் அல் கோருக்கும் ஆலோசகராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.