தமிழ் வேட்பாளரை ஆதரிப்பதில் என்ன தவறு? – கோபி இரத்தினம்

641 0

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் வெற்றி வாய்ப்புகளைக் கொண்ட இரு வேட்பாளர்களும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிராகரித்துள்ளனர். தேர்தலைப் புறக்கணிப்பது என்பது தமிழ்வாக்காளரின் மனநிலையில் விருப்புடைய தெரிவு அல்ல என்பது தெளிவாகிறது. இந்நிலையில் தமிழ் வாக்காளர்கள் ஏன் ஒரு தமிழ் வேட்பாளருக்கு தங்கள் வாக்கினை அளிக்கக் கூடாது என்ற கேள்வியில் நியாயம் இருக்கிறது.

இத்தேர்தலில் இரண்டு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் ஒருவர் தமிழீழ விடுதலை இயக்கத்தில் அங்கத்தவராக இருந்து அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகிய சிவாஜிலிங்கம் மற்றவர் மலையகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் குணரத்தினம்.

பிபிசி தமிழ் இணைய ஊடகத்திற்கு குணரத்தினம் வழங்கிய தகவல்களின் அடைப்படையில் அவர் இலங்கை வாழ் தமிழ் மக்கள் மத்தியில் வாக்களிப்பிற்கான எண்ணத்தை ஊக்குவிக்கும் நோக்குடனேயே தான் இந்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியதாகவும், வெற்றி பெறும் எண்ணத்துடன் அவர் களமிறங்கவில்லை எனத் தெரியவருகிறது. ”கண்டிப்பாக வாக்களியுங்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் தமது பிரசாரம் தொடரும் என்றும், அது எந்தவொரு வேட்பாளராக இருந்தாலும் பரவாயில்லை எனவும் கூறியிருக்கிறார். இவற்றை வைத்துப் பார்க்கையில் அவர் தன்னை ஒரு தமிழ்ப் பொது வேட்பாளராகக் கருதவில்லை என்ற முடிவிற்கு வரமுடிகிறது.

மற்றைய வேட்பாளரான சிவாஜிலிங்கம், “தனக்கு பொது அமைப்புக்கள், புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் அமைப்புக்கள், தொப்புள் கொடி உறவுகளான தாய்த் தமிழகத்தின் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக” மேற்படி ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். சிவாஜிலிங்கத்தை தமிழ்ப் பொது வேட்பாளராக ஏற்று அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தமிழ் மக்கள் மத்தியிலுள்ள சிலரது கருத்தாகவுள்ளது.

சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்புகள் அறவே இல்லாத நிலையில் தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்துவதில் ஏதேனும் அரசியல் முக்கியத்துவம் இருக்கிறதா என்பதனைப் பார்ப்போம்.

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் வெற்றிப்பெறுவது சாத்தியமில்லாதபோதிலும், தமிழ் மக்களின் அரசியல் வேணவாவை முன்னிறுத்தி அதனை ஒரு ஒப்பங்கோடல் முறையிலான வாக்கெடுப்பாக மாற்ற முடியும். அவ்வாறான முயற்சியில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தி அவர் இக்கோரிக்கைகளை தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு போட்டியிடும்போது அவருக்கு விழும் வாக்குகள் இக்கோரிக்கைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் காண்பிக்க முடியும்.

சர்வதேச சமூகத்தின், குறிப்பாக ஐ.நா. மேற்பார்வையில் இவ்வாறான ஒப்பங்கோடல் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அருகிக் காணப்படும் நிலையில் இத்தேர்தலை அதற்கான வாய்ப்பாகதமிழ்மக்கள் பயன்படுத்தியிருக்க முடியும்.

கொள்கையளவில் இம்முயற்சியை ஆதரிக்க முடிந்தாலும், இம்முயற்சி வெற்றிபெறுவதற்கான வாய்ப்பான சூழல் இலங்கைத் தீவில் நிலவுகிறதா என்பதனை ஆராய்ந்த பின்னரே இம்முயற்சியில் தமிழ்தரப்பினர் இறங்க முடியும். ஏனெனில் இவ்வாறு ஒரு பொதுவேட்பாளரை முன்னிறுத்தும்போது அவர் தமிழ் மக்களின் வாக்குகளில் ஐம்பத்தொரு விழுக்காட்டுக் குறைவான வாக்குகளைப் பெற்றுக்கொள்வாரேயானால் இம்முயற்சி தோல்வியில் முடிவது மட்டுமல்லாமல், தமிழ் மக்களின் அரசியற்செயற்பாடுகள் பாரிய பின்னடைவினைச் சந்திக்க நேரிடும். ஆகவே இவற்றைக் கருத்திற்கொண்டே பொதுவேட்பாளர் விடயத்தை கையிலெடுக்கவேண்டும்.

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழ்மக்களில் பெரும்பகுதியிலானவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவேண்டுமானால் எல்லாத்தமிழ் அமைப்புகளும், குறிப்பாக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள அல்லது அவ்வாறு தம்மைக் காண்பித்துக்கொள்கிற அத்தனை கட்சிகளும் நிபந்தனையின்றி அவ்வேட்பாளருக்கு தமது ஆதரவு வழங்கவேண்டும். குறிப்பாகச் சொல்வதானால் அண்மையில் பல்கலைக்கழக மாணவரகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஆறு கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், வளவாளர்கள், மதகுருக்கள் என அத்தனை பிரிவினரும் இம்முயற்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும். அவ்வாறில்லாத நிலையில் இம்முயற்சி வெற்றியடைவது சாத்தியமில்லை.

இன்றைய நிலையில் இவ்வாறு எல்லாத்தரப்பும் இம்முயற்சியை ஆதரிப்பது சாத்தியமில்லை. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முயற்சியை ஆதரிக்காது. தமிழ் மக்களிடையே குறித்தளவு வாக்குப்பலத்தைக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவைத் தனது தெரிவாக ஏற்கனவே முடிவு செய்திருந்த நிலையில், அதற்கு புறம்பாக ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கும். கூட்டமைப்பினரைப் பொறுத்தவரை அவர்கள் கொள்கையளவில் இம்முடிவினை ஆதரிக்கக் கூடும் ஆனால் நடைமுறையில் அவர்களால் அத்தகைய முடிவினை வெளிப்படையாக அறிவிக்க முடியாது. இதற்கு அவர்கள்கைக்கொண்டுவரும் அணுகுமுறையே காரணமாக அமைகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பினரது அணுகுமுறை என்பது மேற்குலகத்தினையும், இந்தியாவினையும் பின்பற்றி அவர்களது ஆலோசனைப்படி செயற்படுவது என்றாகி விட்ட நிலையில், தமிழப் பொது வேட்பாளரை ஆதரிக்குமாறு மேற்படி தரப்புகள் கூறாவிடத்து, கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் விரும்பினாலும் தலைமை அதற்கு உடன்படாது. இன்று சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவினை கூட்டமைப்பு எடுத்துள்ளது என்றால் அது அக்கட்சிகளின் அங்கத்தவர்களின் ஏகோபித்த முடிவல்ல என்பதும் வெளி அழுத்தங்களே இம்முடிவிற்கு காரணமாக அமைந்தது என்பதும் இன்று எல்லோருக்கும் தெரிந்த இரகசியமே.

இவ்வாறான அரசியற் பின்புலத்தில் நின்று ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்தி சிறிலங்கா அதிபர் தேர்தலை ஒப்பங் கோடல் முறையிலான வாக்கெடுப்பாக மாற்றுவது எதிர்பார்க்காத விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதனை விளங்கிக்கொள்வதில் யாருக்கும் சிக்கலிருக்காது.

இக்களயதார்த்தத்தை விளங்கிக் கொள்ளும் நிலையில் சிவாஜிலிங்கம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை அவர் தன்னை ஒரு ஸ்ரன்ற் நாயகனாக வைத்திருக்க விரும்பக்கூடும் அல்லது தனது நிலைப்பாட்டை மற்றைய தரப்புகளுக்கு விளக்கி அவர்களது ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் ஆற்றல் அவருக்கு இல்லாமிலிருக்கலாம். ஆனால் தமிழ்மக்களின் நலன் சார்ந்து தன்னை ஒரு பொதுவேட்பாளராகக் காட்டுவதனை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இத்தேர்தலில் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்றாலும் அவர்களில் யாரும் பொது வேட்பாளர் இல்லை.இத்தேர்தலை தமிழ்மக்கள் ஒரு ஒப்பங்கோடல் வாக்கெடுப்பாகக் கருதவில்லை. ஆகிய இரு விடயங்களிலும் நாம் தெளிவாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது பெருமளவிலான தமிழ்மக்கள் எமது அரசியல் வேணவாவை நிராகரித்துவிட்டார்கள் என்ற கருத்துடன் நாம் உடன்படவேண்டியிருக்கும்.