சிறையில் இருந்து தங்களை விடுவிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க நளினி-முருகன் கோரிக்கை: வழக்கறிஞர் புகழேந்தி

364 0

வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் நளினி, முருகன் ஆகியோர் தங்களை விடுதலை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண் டனை பெற்றுள்ள நளினி, கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள இவரது கணவர் கரன் என்ற முருகனும் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருவரும் தங்களை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் முருகன் கடந்த 15 நாட் களாக உண்ணாவிரதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. எனி னும், இதை சிறைத்துறை அதிகாரி கள் மறுத்து வருகின்றனர். உண்ணாவிரதம் இருப்பதற்கான எந்த மனுவையும் அவர் அளிக்க வில்லை என்று கூறி வருகின்றனர். அதேபோல், பெண்கள் சிறையில் உள்ள நளினி நேற்றுடன் 8-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இருவரின் உடல் நிலையையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், நளினி மற்றும் முருகன் இருவரையும் அவர்களின் வழக்கறிஞர் புகழேந்தி நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தங்களை விடுதலை செய்யக்கோரி நளினியும் முருகனும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அதன் காரணமாக முருகன் உடல் சோர்வுடன் இருக்கிறார். நேற்று முன்தினம் மாலை அவர் மயக்கமடைந்துள்ளார்.

உண்ணாவிரதம் இருந்து வரும் இருவருமே தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரையும் தனிமை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். முதல்வர் தலையிட்டு தங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருவரும் விரும்புகின்றனர். முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டால் தானும் உண்ணாவிரதத்தை கைவிடும் முடிவில் இருப்பதாக நளினி தெரிவித்தார்’’ என்று கூறினார்.