அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெற்று வரும் நிலையில், கடந்த இரு தினங்களுக்குள் இரண்டு வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
கெபத்திக்கொலாவ, கம்பளை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஹெரோவப்பொத்தான பகுதியிலிருந்து தபால் மூலம் வாக்களிப்பதற்காக தனியார் பஸ் வண்டியொன்றில் ஆசிரியர்கள் வருகை தந்துள்ளனர்.
இந் நிலையில் அவ்வாறாக குறித்த பாதையில் பயணிப்பதற்கான அனுமதியளிக்கப்பட்ட வாகனத்தை தவிர வாக்கெடுப்பு நடைபெறும் பகுதிக்கு வேறுவாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, அனுமதியின்றி அந்த பகுதியில் பயணித்த பஸ் வண்டியை பொலிசார் கைப்பற்றியதுடன், அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.
அதேபோல் நேற்று வெள்ளிக்கிழமை கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது.
கம்பளை – குருந்துவத்த பகுதியை சேர்ந்த பாடசாலையொன்றின் பாதுகாவலர் தபால் மூல வாக்குபதிவை செய்த பின்னர் அந்த வாக்கு சீட்டை தனது கையடக்க தொலை பேசியில் புகைப்படம் எடுத்தமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
அத்துடன், அவர் கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மேலும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இது வரையில் 36 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 50 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் 38 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதேச சபை உறுப்பினர், பிரதேச சபை உபதலைவர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர், பொலிஸ் உத்தியேகஸ்தர் உள்ளிட்ட 38 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

