யாழ்.மாவட்டத்தில் சுமூகமான முறையில் தேர்தலை நடத்த முடியும் – வேதநாயகன்

299 0

யாழ்.மாவட்டத்தில் சுமூகமான முறையில் தேர்தலை நடத்த முடியுமென்றும், தேர்தல் கடமைகளில் 6 ஆயிரம் அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர் “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இந்த வருடம் யாழ்.மாவட்டத்தில் 4 லட்சத்து 75 ஆயிரத்து 171 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். 531 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இன்று இரண்டாவது நாளாக தபால் மூல வாக்களிப்புக்கள் இடம்பெற்றுவருகின்றன. 267 திணைக்களங்களில் 29 ஆயிரத்து 850 பேர் தபால்மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகம், பொலிஸ் திணைக்களம் மற்றும் தேர்தல் உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி அந்ததந்த திணைக்களங்களில் தமது வாக்குகளை அளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேர்தல் குற்றங்கள் தொடர்பாக 26 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன. சிறு சிறு குற்றங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் இடமாற்றம் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதென சிறு குற்றங்கள் அடங்குகின்றன. அதற்கான உரிய தீர்வுகளும் உடனடியாக எடுக்கப்படவுள்ளன.

வழமை போன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலேயே வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும், வாக்கெண்ணும் நிலையம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீரற்ற காலநிலை நிலவுவதனால், நெடுந்தீவில் இருந்து உலங்குவானூர்தி மூலம் வாக்குப் பெட்டிகள மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டு, அங்கே வாக்கெண்ணும் பணிகள் நடைபெறும்.

எழுவைதீவு மற்றும், அனலைதீவு உள்ளிட்ட தீவுகளில் இருந்து கடற்படையின் பாதுகாப்புடன், வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்படும். வாக்களிக்கும் நேரம் 1 மணித்தியாலயத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், வாக்கெண்ணும் நேரத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்காது.

அருகில் உள்ள வாக்குச் சாவடிகளில் இருந்து வரும் வாக்குப் பெட்டிகள் மிக விரைவாக எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

தூர இடத்து வாக்குப் பெட்டிகள் உரிய நேரத்தில் எண்ணுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும். இம்முறை தேர்தல் கடமைகளில் 6 ஆயிரம் அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடவுள்ளனனர்” என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.