அமெரிக்கா கையெழுத்திட முயற்சிப்பது ஏன்? : வாசுதேவ

327 0

ஜனநாயகத்துக்கு முக்கியத்துவமளிக்கும் நாடான அமெரிக்கா , பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் மிலேனியம் சவால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முயற்சிப்பது ஏன் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கேள்வியெழுப்பினார்.

 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்  இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் கூறியதாவது :

மிலேனியம் சவால் ஒப்பந்தத்தின் பிரதான இலக்கு அமெரிக்க இராணுவத்தை இலங்கையில் புகுத்துவதாகும். அதற்கான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் இலங்கையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் என்பவையே இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் கூறுகிறார்கள். இதன் மூலம் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக உருவாக்க முடியும் என்றும் கூறுகிறார்கள்.

இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்காக நில சீர்திருத்த சட்டம் அவசியம் என்று கூறுகின்றனர். இந்த சட்டம் எமது ஆட்சி காலத்தில் நடைமுறைபடுத்தப்பட்டிருந்தது. அந்த சட்டத்தில் வெளிநாடுகளுக்கு இலங்கையின் இடங்களை விற்க கூடாது என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஜனநாயகம் பற்றி தொடர்ச்சியாக பேசும் ஒரு நாடாகும். எனினும் உள்ளுராட்சி தேர்தல் மூலம் இந்த அரசாங்கத்தை மக்கள் புறக்கணித்திருப்பதை அறிந்தும் , மக்கள் எதிர்க்கும் அரசாங்கத்துக்கு அமெரிக்கா ஆதரவளிப்பது ஏன்?

மிலேனியம் சவால் ஒப்பந்த்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திர கட்சி என்பன தற்போது ஒன்றிணைந்துள்ளன.

இதனால் தற்போது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. எனவே இந்த ஒப்பந்த்தில் கையெழுத்திடுவதற்கான அதிகாரம் இந்த அரசாங்கத்துக்கு இல்லை என அவர் இதன்போது தெரிவித்தார்.