உள்ளூர் அதிகார சபையின் தலைவர்கள் உத்தியோக பூர்வ வாகனங்களை தேர்தல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த தடை

332 0

உள்ளூர் அதிகாரசபையின் தலைவர்கள் தமது உத்தியோக பூர்வ வாகனங்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை முற்றுமுழுதாக தடை செய்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூர் அதிகாரசபையின் தலைவர்கள் அவர்களது உத்தியோக பூர்வ வாகனங்களை பயன்படுத்தி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருவதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு பல முறைபாடுகள் கிடைத்துள்ளன.

இது தொடர்பாக தேசிய தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமது சொந்த தேவைகளுக்காகவே வாகனங்களை பயன்படுத்த முடியும் என்ற உரிமையில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு வாகனங்களை பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.அத்துடன் தமது வாகனங்களை வெளியிடங்களில் நடைபெறும் அரசியல் கூட்டங்களுக்காக பயன்படுத்துவதாகவும் அக் கூட்டங்களில் பங்குபற்றுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அத்துடன் உத்தியோகபூர்வ வாகனத்தில் சென்று கூட்டங்களில் கலந்துக் கொள்வது மட்டுமன்றி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக சுவரொட்டிகளை கொண்டுச் செல்வதற்காகவும் மற்றும் துண்டுபிரசுரங்களை வழங்க வாகனங்களை பயன்படுத்துவதாக முறைபாடுகள் பதிவாகியுள்ளன. இது போன்ற செயற்பாடுகள் அரசசொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதாகவே கருதப்படும்.

இவ்வாறு தேர்தல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்ட உள்ளுர் அதிகாரசபைக்கு சொந்தமான வாகனங்களை பொலிஸார் பல தடவைகள் கைப்பற்றியுள்ளனர். அதிகாரசபைக்கு சொந்தமான சொத்துகளை எந்தவிதமான கட்டணமும்மின்றி தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த முடியாது.

இவர்களின் உத்தியோக பூர்வ இல்லங்களை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தக் கூடாது. உள்ளுர் அதிகார சபையின் அதிகாரிகள் நிரந்தர ஊழியர்கள் நாளாந்த சம்பளம் பெறும் தற்காலிக ஊழியர்கள் ஆகியோரை தேர்தல் நடவடிக்கையில் ஈடுப்படுத்தக் கூடாது. கட்சிகள் வேட்பாளரை ஊக்குவிப்பதற்கான அறிவித்தல் பதாதைகள் கொடி பொது இடங்களில் காட்சி படுத்துவது குற்றமாகும்.

ஊர்வலங்கள் , மோட்டார் சைக்கிள் வாகன பேரணிகளை தவிர்க்குமாறும் அனைத்து அதிகார சபைதலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான குற்றச்சாட்டுகள் கிடைக்கப் பெற்று அது நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதிகாரசபை தலைவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும்.

இத்தகைய முறைகேடுகள் தொடர்பான முறைபாடுகளை பதிவு செய்யுமாறு அனைத்து பிரஜைகளுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் இந்த வழிகாட்டலுக்கமைய செயற்படுவதின் மூலமாகவே சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களை நடாத்தமுடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.