மொரகஹஹேன மற்றும் பேலியகொட ஆகிய பகுதிகளில் திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கும் , குற்றப்பிரிவினருக்கும் நேற்று வெள்ளிக்கிழமை கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதன்போது மொரகஹஹேன – கோனபல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கும்புக்க – கோனபல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 141 சட்டவிரோத மதுபான போத்தல்களும் , மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் 2 கோடாக்களும் (பீப்பாய்கள்) மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை பேலியகொட பகுதியில் குற்றப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மதுபானத்துடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜாஎல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 100 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் பொலிஸாரும், குற்றப் பிரிவினரும் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

