டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் – தமிழக அரசு முடிவு

701 0

தமிழகத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் 2016-ம் ஆண்டு உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்தபிறகு தேர்தல் நடத்த முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டது.

அப்போது இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை எனக் கூறி உயர்நீதி மன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. இதனால் தேர்தல் நடத்த கோர்ட்டு தடை விதித்தது.

அதன்பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போனது. இதற்கான காரணத்தை அரசு அவ்வப்போது கோர்ட்டில் தெரிவித்து வந்தது.

ஆனாலும் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை முடிவு செய்து அறிவிக்கும் படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தி வந்தது. அப்படி இருந்ததும் இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. சந்தித்தது. அதில் பெரும் தோல்வியை சந்தித்தது.

அதன்பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைத்தும் ஒரு தொகுதியில் மட்டும் தான் வெற்றி பெற்றது. அந்த சமயத்தில் 22 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் 9 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை இழந்தது. ஆனாலும் இந்த தொகுதியில் அடங்கிய 6 சட்டசபை தொகுதிகளில் 3-ல் கூடுதல் ஓட்டுகளை பெற்றது. இது அ.தி.மு.க.வுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலிலும் அ.தி.மு.க. மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்

 

இந்த வெற்றி அ.தி.மு.க.வினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே விரைவில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.

இதுபற்றி துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

மக்களின் நம்பிக்கையை பெற்று அ.தி.மு.க. இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எங்களின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை உறுதியாக இருப்பதை இந்த தேர்தலில் காண முடிந்தது. இதிலிருந்து தமிழகத்தை ஆளும் உரிமை அ.தி.மு.க.வுக்கு மட்டுமே உள்ளது என்பது நிரூபணமாகி உள்ளது.

எனவே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 30-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

2 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் உள்ளாட்சி தேர்தலை நடத்தி விடுவார்கள் என்று கட்சிக்காரர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இப்போது ஓ.பன்னீர்செல்வம் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று கூறி இருக்கிறார். இது கட்சிக்காரர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையமும் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை தற்போது தீவிரப்படுத்தி உள்ளது.