பயங்கரவாதிகளுக்கும், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் எமது அரசாங்கத்தில் மரணதண்டனை!

568 0

எமது நாட்டிற்குள் பயங்கரவாத செயறபாடுகளில் ஈடுபடுபவர்கள் என்று நீதிமன்றத்தின் மூலம் உறுதிப்படுத்தப்படும் நிலையில் அவர்களுக்கு மரணதண்டனையை வழங்குவதற்கு எமது அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுப்போம்  என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அதுமாத்திரன்றி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, எமது நாட்டின் எதிர்கால சந்ததியினரின் வாழ்வை அழிப்பவர்களுக்கும் மரணதண்டனை வழங்கப்படும்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு என்பது தீவிரவாதத்தை ஒழிப்பது மாத்திரமல்ல, மாறாக போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதும் தேசிய பாதுகாப்பு தொடர்பான எனது கொள்கையில் முக்கியத்துவம் பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய ஜனநாயக முன்னணியினால் நேற்று மாலை ஜா-எல நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடொன்றை நிர்வகிக்கும் போது நாடு மற்றும் நாட்டுமக்களின் சுபீட்சம், மக்களின் தேவைகள், நாட்டின் எதிர்கால அபிவிருத்தி ஆகிய விடயங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றை அறிந்து பூர்த்திசெய்து, நாடு முன்நோக்கிப் பயணிப்பதற்கு வழிகாட்டுவதே சிறந்த தலைமைத்துவத்தினால் ஆற்றப்பட வேண்டிய பணியாகும். கடந்த காலத்தில் நாடு பயணித்த பாதையை மாற்றயமைத்து புதியதொரு இலக்கில், திட்டத்தில், சிறந்ததும் துடிப்பானதுமான தலைமைத்துவத்தின் வழிகாட்டலில் சுபீட்சமானதொரு எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பதா, இல்லையா என்ற தீர்மானத்தை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.