இந்தியப் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட 68 அப்பாவிகளின் நினைவுதினம்!

323 0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து இந்தியப் படைகள் அரங்கேற்றிய தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட 68 பேரின் 32ஆவது ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் மருத்துவர்கள், மருத்துவ சேவையாளர்கள் உட்பட வைத்தியசாலைப் பணியாளர்கள் அஞ்சலி செலித்தினர்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 21ஆம் திகதி புகுந்த இந்தியப் படையினர், இரண்டு நாட்களாக வைத்தியசாலையை ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.

இதன்போது இந்தியப் படைகள், மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதியர்கள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்கள் என 68 பேரைக் கொன்று குவித்தன.

தமிழர் தாயகத்தில் இந்தியப் படைகள் அரங்கேற்றிய அப்பாவிகள் படுகொலைச் சம்பவங்களில் இதுவும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.