எனது ஆட்சியில் பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு, இரு தொகுதி சீருடை இலவசம்-சஜித்

227 0

தான் ஜனாதிபதியாக வந்ததும் அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் சகல மாணவர்களுக்கும் இலவசமாக காலை உணவும், இரு தொகுதி சீருடைத் துணியும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தரணியகல பிரதேசத்தில் நேற்று (15) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கிழிந்த சீருடை அணிந்து கொண்டு பாடசாலை செல்லும் போது எனது தந்தை பாடசாலை மாணவர்கள் 43 லட்சம் பேருக்கு சீருடை மற்றும் காலை உணவை வழங்க நடவடிக்கை எடுத்தார். எமது எதிர்த்தரப்பினர்தான் இம்மாணவர்களுக்கு வழங்கிய காலை உணவை நிறுத்த நடவடிக்கை எடுத்தனர்.

தான் எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதியாக வந்ததும், இரு தொகுதி சீருடைகளை வழங்க நடவடிக்கை எடுப்பேன். பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்த காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். இன்றும் பாடசாலை மாணவர்களின் போசனைக் குறைபாடு ஒரு பிரச்சினையாகவே உள்ளது. மாணவர்கள் பாடசாலை செல்வது கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கே. அந்த நோக்கத்தை சஜித் பிரேமதாச உரிய முறையில் நடைமுறைப்படுத்துவார் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.