கழிவுகளை பயன்படுத்தி மின் உற்பத்திக்கு இத்தாலி உதவி

289 0

கழிவுகளை பயன்படுத்தி மின் உற்பத்தியை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இத்தாலி தொழில்நுட்ப உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜி. மன்னெல்லா இற்குமிடையில் இடம்பெற்ற அதிகாரப்பூர்வ கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

இலங்கையின் மின்மயமாக்கலின் நிலைமையைப் பாராட்டிய இத்தாலியின் தூதுவர் இலங்கை எதிர்காலத்தில் அதிகரித்து வரும் மின்சார தேவையை எதிர்கொள்ளக்கூடும் என்றும் கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் செயல்முறையை அறிமுகப்படுத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் கூறினார்.

100 தொடக்கம் 300 தொன் எடைகொண்ட கழிவுப்பொருட்களை பயன்படுத்தி மின் உற்பத்தியை முன்னெடுப்பதற்கு மின் ஆலை ஒன்றின் உருவாக்கம் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையில் மலிவான மின்சார மூலமாக நீர் ஆதாரம் அதிகளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. எதிர்கால மின்சார தேவையை பூர்த்தி செய்ய இதுபோன்ற செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழல் நட்பு மின் உற்பத்தி முறை குறித்து கவனம் செலுத்தியமைக்காக அமைச்சர் ரவி கருணநாயக்க இத்தாலிய தூதருக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த திட்டத்தை இலங்கையில் தொடங்க இத்தாலிய அரசாங்கத்தின் முழு ஆதரவு எதிர்பார்க்கப்படுவதாகவும் இது நீண்டகால இத்தாலிய-இலங்கை நட்பு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் என்பதை நம்புகிறேன் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்தார்.