மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இரத்த வெறி பிடித்தவர் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி நகர சபை மண்டபத்தில் இன்று (14) இடம்பெற்ற தேர்தல் பிரசாரம் கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாட்டில் இரத்த கலரியை ஏற்படுத்தியதை தவிர வேறு எதனையும் செய்தது இல்லை எனவும் செய்ய போவதும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
கடந்த 30 வருடத்திற்கு முன்னர் கிடைத்த வாக்குரிமையின் மூலம் எம்மவர்களை உள்ளுராட்சி மன்றங்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் அனுப்பிய போதிலும் அவர்கள் எம்மை இலக்கை நோக்கி அழைத்து செல்லவில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.
ஆனால் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஆறு பேர் பாராளுமன்றங்களுக்கு செல்ல சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் அதன் மூலம் இன்று மலையகம் எப்போதும் கண்டிராத அபிவிருத்திகள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே அடுத்த தேர்தலில் இந்த ஆறு பேரை விட அதிகமானவர்கள் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பாராளுமன்றம் செல்வது உறுதி எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அவ்வாறு தொடர்ந்து திடத்துடன் பயணிக்க ஜனாதிபதி என்பவரின் சக்தி முக்கியமானது எனவும் அதற்காக சரியான மற்றும் நேர்மையான ஒருவரை தெரிவு செய்வது அவசியமானது எனவும் அவர் கூறினார்.
அதற்கு பொருத்தமானவர் சஜித் பிரேமதாச எனவும் அவரின் மூலமே மலையக மக்களுக்கு சுபிட்சமான எதிர்காலம் அமையும் எனவும் கூறினார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி முட்டை ஒன்றை இட்டு ஊருக்கு சத்தமாக சொல்லும் கோழிகளை போன்றவர்கள் அல்லர் எனவும் மாறாக சத்தமில்லாமல் இலக்கை நோக்கி பயணிப்பவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே சஜித் பிரேமதாசவிடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் கொக்கறிக்காமல் இலக்கை அடையும் பயணத்தில் முழு வீச்சுடன் செயற்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

