நல்லாட்சி அரசாங்கம் நீடித்தால் நாட்டில் எதுவும் மிஞ்சாது – மஹிந்த

183 0

நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்கச் செய்தால், இறுதியில் நாட்டில் எதுவும் எஞ்சியிருக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கடவத்தையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வேலை செய்யக்கூடிய ஒருவரை நாம் இன்று மக்களுக்காக வேட்பாளராக களமிறக்கியுள்ளோம். இந்த முடிவை நாம் மிகவும் சிந்தித்தே எடுத்துள்ளோம்.

தூங்காமல் இருக்கும் ஒருவரை ஜனாதிபதியாக்கி பலனில்லை என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒருவர் தூங்காமல் ஏன் இருக்கிறார் என்று எமக்குத் தெரியாது. இதனை மக்களே தீர்மானித்துக்கொள்ளட்டும்.

நாம் என்ன செய்ய வேண்டும் என்று மக்களாகிய உங்களிடம் கேட்டோம். கிராமம் கிராமமாக சென்று ஆலோசனைகளை பெற்றுக்கொண்டோம்.

நாம் ஆட்சிக்கு வந்தாலும், மக்களின் பேச்சைக் கேட்டே அரசாங்கத்தை நடத்துவோம் என்பதை இவ்வேளையில் அச்சமில்லாமல் கூறிக்கொள்கிறோம்.

இந்த அரசாங்கம் மக்களுக்காக என்ன செய்துள்ளது? – ஒன்றுமில்லை.  இவர்கள் தொடர்ந்து ஆட்சியில் நீடித்தால் நாட்டில் எதுவும் எஞ்சியிருக்காது.

எனவே, நவம்பர் 16ஆம் திகதி சென்று தாமரை மொட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து, எல்பிட்டிய முடிவுகளைப் போன்றதொரு வெற்றியை எமக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று இவ்வேளையில் நான் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.