மாமல்லபுரத்தை வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை

169 0

பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் சந்திப்பு பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் மாமல்லபுரத்தை வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இந்திய பாரத பிரதமர், சீன அதிபர் சந்திப்பானது இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பாகும். இதன் விளைவாக மகாபலிபுரத்தில் உள்ள கலை சிற்பங்களும், புராணங்களின் எழுத்துக்களும் புதுபித்து, “தூய்மை இந்தியா” (Clean India) என்கிற திட்டத்தை கொண்டு வந்த பாரத பிரதமர் சுத்தம் சோறு போடும் என்ற பழமொழிக்கு ஏற்ப சென்னை விமான நிலையம் முதல் கிண்டி, ECR, OMR, மகாபலிபுரம் வரை வெளிநாட்டுக்கு இணையாக மிகசுத்தமாக மாற்றியிருக்கிறார்கள்.

இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சுற்றுலாவிற்கு வருகைதரும் மக்களும், சுத்தத்தை பேணிக்காத்து, மகாபலிபுரத்தை உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மகாபலிபுரத்தை இன்றுபோல் என்றும் சுத்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருடைய கடமையாக உறுதிமொழி எடுத்துக்கொண்டு, மக்களும், அரசாங்கமும் கரம் சேர்ந்து சென்னை முழுவதும் தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும் என சபதம் ஏற்போம்.

மகாபலிபுரம் இன்றைக்கு உலகத்தரத்திற்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த இடத்தை மிக முக்கிய சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி எடுக்கவேண்டும். அதற்கு மக்கள் உறுதுணையாக இருந்து இந்த இடத்தை அசுத்தம் செய்யாமல், தங்கள் கடமையாக நினைத்து தூய்மையாக வைத்து பாதுகாக்கப்பட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.