ஜனாதிபதித் தேர்தலில் எமது வேட்பாளராகக் களமிறக்கியிருக்கின்ற சஜித் பிரேமதாஸவை வெற்றியடையச் செய்வதற்காக ஒவ்வொரு பிரதேசங்களிலும், அங்கு வாழும் மக்களுக்கு ஏற்றவாறு பொய்யான பிரசாரங்களை மேற்கொள்ள மாட்டோம்.
எனினும் மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றிகண்டு, நவம்பர் மாதம் 16 ஆம் திகதியிலிருந்து நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு இளைஞர், யுவதிகளை முன்நிறுத்திய ஒரு புதிய பயணத்தை ஆரம்பிப்போம் என்று மின்சக்தி, சக்திவலு மற்றும் வர்த்தக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பமானது. அக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எமது வேட்பாளராகக் களமிறக்கியிருக்கின்ற சஜித் பிரேமதாஸவை வெற்றியடையச் செய்வதற்காக ஒவ்வொரு பிரதேசங்களிலும், அங்கு வாழும் மக்களுக்கு ஏற்றவாறு பொய்யான பிரசாரங்களை மேற்கொள்ள மாட்டோம்.
2015 ஆம் ஆண்டிற்கு முன்புவரை மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்த காலத்தை முடிவிற்குக் கொண்டுவந்து, ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டத்தில் வெற்றகண்டோம். அதனைத் தொடர்ந்து நாங்கள் உறுதியளித்ததைப் போன்று நாட்டில் உயர்ந்தபட்ச ஜனநாயகத்தை நிலைநாட்டினோம்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஜனநாயகத்திற்கு முரணான செயற்பாட்டின் போதும் இதுபோன்ற பெருமளவு மக்கள் கூட்டத்தைத் திரட்டி எமக்கு ஆதரவளித்தீர்கள். இம்முறையும் அத்தகைய ஆதரவை வழங்குவதற்கு முன்வந்திருக்கிறீர்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் அரச தொழிலாளர்களின் ஊதியத்தை பெருந்தொகையால் அதிகரித்தோம். அதேபோன்று இராணுவத்தினரது சம்பளத்தையும் அதிகரித்தோம். அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்தோம். நாட்டில் குறித்த சில பிரதேசங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தியை முழுநாட்டிற்கும் விஸ்தரித்தோம். இளைஞர், யுவதிகளே எமது நாட்டின் எதிர்காலம். அவர்களை முன்நிறுத்திய சுபீட்சமான பயணமொன்றை எதிர்வரும் மாதம் 16 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிப்போம் என அவர் தெரிவித்தார்.

