49 பிரபலங்கள் மீதான வழக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து – பிரதமர் மோடிக்கு சசிதரூர் கடிதம்

224 0

49 பிரபலங்கள் மீதான வழக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு சசிதரூர் எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.கும்பல் கொலைகள் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய டைரக்டர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்களுக்கு எதிராக தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.

அதில், சசிதரூர் கூறியிருப்பதாவது:-

கும்பல் கொலைகளுக்கு எதிராக தங்களுக்கு கடிதம் எழுதியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துக்கொள்கிறேன். தங்களையோ, தங்கள் அரசையோ விமர்சிப்பவர்களை தேச விரோதிகளாகவோ, எதிரிகளாகவோ பார்க்க வேண்டாம்.

விமர்சனம் இல்லாவிட்டால், முன்னேற்றம் இருக்காது. மாற்றுக்கருத்து இல்லாமல் ஜனநாயகம் இல்லை. மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து பிரபலங்கள் கண்ணை மூடிக்கொண்டிருந்தால், அது சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும்.

அரசை விமர்சிப்பவர்கள் மீது வழக்கு போடுவதுதான் நீங்கள் படைக்கப்போகும் புதிய இந்தியாவா? ஆகவே, மாற்றுக்கருத்தை வரவேற்கும் நிலைப்பாட்டை நீங்கள் எடுப்பதுடன், கருத்து சுதந்திரத்தை கட்டிக்காப்பதாக நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு சசிதரூர் கூறியுள்ளார்.