பிரசாரப்பணிகளில் வேட்பாளர்கள் சூழலுக்கு நேயமான முறைகளைப் பின்பற்ற வேண்டும்-கரு

244 0

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தமது பிரசாரங்களில் பொலித்தீன், பிளாஸ்டிக், பட்டாசுகள் மற்றும் பாரிய பதாகைகளைத் தவிர்த்து சூழல் பாதுகாப்பு தொடர்பான தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமது வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரப்பணிகளை ஆரம்பித்திருக்கின்றன.

இந்நிலையில் பிரசாரங்களுக்காக வேட்பாளர்களை பிரபல்யப்படுத்தும் நோக்கில் பதாகைகள் காட்சிப்படுத்தப்படுவதும், சுவரொட்டிகள் மக்கள் மத்தியில் விநியோகிக்கப்படுவதும் வழமையாக நடைபெறுகின்ற விடயங்களாகும்.

இந்நிலையிலேயே தேர்தல் பிரசாரங்களின் போது சூழல் பாதுகாப்பை முன்னிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்றைய தினம் கருத்தொன்றை வெளியிட்டிருக்கிறார்.

அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சூழல் மீதான தங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வழி யாதெனின் பொலித்தீன், பிளாஸ்டிக், பட்டாசுகள் மற்றும் பாரிய பதாகைகளைத் தவிர்த்து சூழல்நேயக் கொள்கையொன்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஏனையோருக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாகும்’.