சமையல் எரிவாயு விலை மாற்றத்தின் முழு விபரம்- விலைத்திட்டத்தை மீறினால் சட்ட நடவடிக்கை

269 0

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்றோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில், வர்த்தக மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்திருக்கிறார்.

12.5 கிலோகிராம் லிட்றோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கொழும்பு மாவட்டத்தில் 240 ரூபாவாலும், ஏனைய மாவட்டங்களில் 251 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 95 ரூபாவாலும், 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 30 ரூபாவாலும் குறைக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி கொழும்பு மாவட்டத்தில் லிட்றோ எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகளை நோக்கும்போது, 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1,733 ரூபாவிலிருந்து 1,493 ரூபாவாகக் குறைந்திருக்கும் அதேவேளை, 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 693 ரூபாவிலிருந்து 598 ரூபாவாகக் குறைந்திருக்கிறது.

2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 319 ரூபாவிலிருந்து 289 ரூபாவாகக் குறைந்துள்ளது. ஏனைய மாவட்டங்களிலும் லிட்றோ எரிவாயு சிலிண்டரின் விலைகள் நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருமாறு குறைவடைந்துள்ளது.

இந்த புதிய விலைத்திட்டத்தை மீறி செயற்படுவோரைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.