யானைகளின் உயிரிழப்பு குறித்து CID விசாரணை

318 0

ஹபரண, திகம்பதஹ, ஹிரிவடுன்ன வனப் பகுதியில் யானைகள் உயிரிழந்தமை குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினூடாக விசாரணைகளை ​ஆரம்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் நீதிமையம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய யானைகளின் உடலில் விஷம் கலந்துள்ளமை தெரியவந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளதாக மையத்தின் தலைவர் சட்டத்தரணி ரவிந்தரநாத் தாபரே கூறியுள்ளார்.

இது குற்றவியல் குற்றமாகக் கருதப்படுவதாலும் பொதுசொத்து தொடர்பான குற்றம் என கருதப்படுவதாலும் இது குறித்து முழுமையான விசாரணையை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கோருவதாகவும் சுற்றாடல் நீதி மையத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உயிரிழந்த காட்டு யானைகளின் உடல் மாதிரிகள் 3 நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம், பேராதனை பல்கலைக்கழகத்தின் மிருக வைத்தியர் பீடம், சுகாதார திணைக்களத்தின் மிருக பரிசோதனை நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த மாதிரிகள் நேற்று அனுப்பிவைக்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் யானைகளின் உடல் மாதிரிகள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளன.

ஹிரிவடுன்ன, தும்பிகுளம் வனப்பகுதியின் சில பகுதிகளில் உயிரிழந்த நிலையில் 7 யானைகளின் சடலங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.