நாட்டில் மீண்டும் ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியை கொண்டுவந்து, குழப்பத்தை ஏற்படுத்தவே பொதுஜன பெரமுன முனைவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.
ஹற்றனில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பெரியசாமி பிரதீபன் மேலும் கூறியுள்ளதாவது, “பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஒரு ஏணியாக பயன்படுத்தி ஆட்சி பீடம் ஏறவே முயற்சித்து வருகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் பொதுஜன பெரமுன நடத்தி வந்தது.
ஆனாலும் அவர்கள், தான்தோன்றித்தனமாகவே செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர். மேலும், வெறுமனமே சுதந்திரக்கட்சிகளின் வாக்குகளை பெற்றுக்கொண்டு வெற்றிப்பெறவே முயற்சிக்கின்றது.
இதனால், சுதந்திரக்கட்சிக்கு எந்ததொரு பயனும் கிடைக்கப்போவதில்லை. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபாய ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிதி அமைச்சராக பல்வேறு மோசடிகளில் ஈடுப்பட்ட பசில் ராஜபக்சவின் பெயரும் சபாநாயகராக சமல் ராஜபக்சவை நிறுத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ச வம்சத்தை சேர்ந்த பலர், ஆட்சியில் அதிகாரம் மிக்க பதவிகளை வகிப்பதற்காக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
இதனூடாக பொதுஜன பெரமுன மீண்டும் குடும்ப ஆட்சியை கொண்டு வந்து, நாட்டை சீர்குலைக்க முனைகின்றமைதெளிவாக தெரிகின்றது.
ஆகையால் சஜித் பிரமேதாசவிற்கு ஆதரவை வழங்கி, மீண்டுமொரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

