மத்திய வங்கியின் பிணைமுறி மோசடிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாத்திரம் அல்ல இன்று அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாசவும் பொறுப்பு கூற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்துடன் ஜனநாயகம் என்ற சொற்பதத்தையே நல்லாட்சி அரசாங்கம் மோசடி செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் உள்ள தேசிய கண்காட்சி காட்சிப்படுத்தல் அரங்கில் இன்று இடம்பெற்ற லங்கா சமசமாஜ கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய யுகத்தினை நோக்கிய பரிணாமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று புகழாரம் சூட்டிக் கொள்கின்றார்கள். ஆனால் கடந்த நான்கு வருட காலத்தில் நாட்டில் இடம்பெற்ற முறைகேடுகளை மீள் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சியமைத்த அரசாங்கத்தின் இலட்சனம் மத்திய வங்கியின் பினைமுறி மோசடியுடன் வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் இதன்போது கூறினார்.

