தீவிரவாத தொழிற்சாலை நடத்துபவர்கள், எங்கள் மக்களின் பிரதிநிதியாகப் பேசத் தேவையில்லை: இம்ரான் கானுக்கு இந்தியா பதிலடி

264 0

தீவிரவாத தொழிற்சாலை நடத்துபவர்கள், வெறுப்புணர்வை சித்தாந்தமாக வைத்திருப்பவர்கள் எங்கள் மக்களுக்கு ஆதரவாக, பிரதிநிதியாகப் பேசத் தேவையில்லை என்று ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பதிலடி தரும் வகையில் இந்தியா பேசியுள்ளது.

ஐ.நா சபையின் 74-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கடந்த 24-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது, வரும் 30-ம் தேதிவரை இந்த கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 7 நாட்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்று தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இறுதியாக ஐ.நா.வில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றிய பின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார். இம்ரான் கானின் 50 நிமிடப் பேச்சில் பெரும்பகுதி காஷ்மீர் குறித்தும், அங்குள்ள மக்களுக்கு எதிராக இந்திய அரசு செயல்படுவதாகவும், மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும் குற்றம்சாட்டினார். இந்தியாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து, அணு ஆயுதப்போர் மூளும் சூழல் இருப்பதாக எச்சரித்தார்.

 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் பதில் அளிக்கும் உரிமையை இந்தியா பயன்படுத்தி பேசியது. ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர முதன்மைச் செயலாளர் விதிஷா மைத்திரா பேசியதாவது:

இந்த ஆகஸ்ட் மாதம் அரங்கில் இருந்து பேசப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் நம்பும்படியாக, வரலாற்றின் அம்சங்களை தாங்கி இருந்தது. ஆனால், துரதிரஷ்டமாக இன்று நாங்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் கேட்ட வார்த்தைகள் அனைத்தும் உலகில் எதிர்துருவங்களை சித்தரிப்பாக இருந்தது.

அதாவது எங்களுக்கு-அவர்களுக்கு, ஏழைகள்-பணக்காரர்கள், வடக்கு- தெற்கு, வளர்ச்சி அடைந்தவர்கள்- வளர்ந்து வருபவர்கள், முஸ்லிம்-முஸ்லிம் அல்லாதவர்கள் என்ற எதிர்துருவ அர்த்தங்ககளை குறிப்பிட்டு பேசினார்.

இந்த உரை ஐ.நா.பொதுக்கூட்டத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. உலகச்சமூகத்தில் இருக்கும் வேறுபாடுகளை இன்னும் கூர்மைப்படுத்தி, வெறுப்பு விதைக்கும் பேச்சாக இருக்கிறது.

ஐ.நா.பொதுக்கூட்டத்தில் தனக்கு பேசுவதற்கு கிடைத்த வாய்ப்பை இதுபோன்று தவறாகவும், எல்லை மீறியும் பாகிஸ்தான் பிரதமர் பயன்படுத்தியுள்ளதை்தான் வெளிப்படுகிறது.

வார்த்தைகளை பயன்படுத்துவதில் ராஜதந்திரம் இருத்தல் வேண்டும். ஆனால், இம்ரான் கான் பயன்படுத்திய வார்த்தைகளான இனப்படுகொலை, ரத்தக்களறி, இன ஆதிக்கம், துப்பாக்கி, போரின் மூலம் முடிவு தேடுதல் போன்றவை 21-ம் நூற்றாண்டில் வாழ்கிறவர் பேசுவது போல், அதைநோக்கி நகர்வதுபோல் இல்லாமல் மத்தியகாலத்தில் வாழ்பவர் போல் பேச்சு இருந்தது.

இனப்படுகொலை என்பது பிரதமர் இம்ரான் கானுக்கும், பாகிஸ்தானின் முன்னாள் ராணுவத் தளபதி நியாஜி ஆகியோருக்கு புதிதானது அல்ல

வரலாற்றின் விஷயங்களை புரிந்துகொள்ளுங்கள், உங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள் என்று நாங்கள் கேட்கிறோம். கடந்த 1971-ம் ஆண்டில் தனது சொந்த மக்களுக்கு எதிராகவே பாகிஸ்தான் எவ்வாறு இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பதை யாரும் மறக்க மாட்டார்கள்.

அதற்கு முக்கியமாக அப்போது லெப்டினல் ஜெனரல் ஏ.ஏ.கே நியிஜி இருந்தார். இந்த சம்பவம் குறித்துக் கூட வங்கதேசப் பிரதமர் தனது அவையில் இதை குறிப்பிட்டார். பேரழிவு தரும் அணுஆயுதங்களை வைத்திருக்கிறோம் என்று கட்டவிழத்துவிட்டதுபோன்று பேசுவது சரியான ராஜதந்திரமான பேச்சு அல்ல

ஒட்டுமொத்த தீவிரவாத தொழிற்சாலை இருக்கும் ஒருநாட்டின் தலைவராக வந்திருந்து, பிரதமர் இம்ரான் கானின் பேச்சு திமிராகவும், பதற்றத்தை தூண்டுவதாகவும் இருக்கிறது.

தீவிரவாத தொழிற்சாலையை வைத்துக்கொண்டு்ம, வெறுப்புணர்வு சித்தாந்தங்களோடும் இருப்பவர்கள், இந்திய மக்களுக்கு பிரதிநிதியாக இங்குவந்து பேசத் தேவையில்லை. தீவிரவாதத்தையும், வெறுப்புப் பேச்சையும் பிரதானமாக வைத்துக் கொண்டு, மனித உரிமைகள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் பேசுகிறார்.

சில கேள்விகளை நாங்கள் பாகிஸ்தானுக்கு முன்வைக்கிறோம். தீவிரவாதிகளுக்கு எதிராக போராடுகிறோம் என்று கூறும் பாகிஸ்தான், ஒசாமா பின்லேடனை மறைத்து வைத்திருக்கவில்லை என்று மறுக்கப்போகிறதா.

ஐ.நா. அறிவித்த 130 சர்வதேச தீவிரவாதிகளும், 25 தீவிரவாத அமைப்புகளும் தங்கள் நாட்டில் இல்லை என்று உறுதி செய்ய முடியுமா. ஐ.நா. தீவிரவாதிகள் என்று ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டவர்களுக்கும், தடை செய்யப்பட்டவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் உலகில் ஒரேஅரசு பாகிஸ்தான் என்பதை மறுக்க முடியாது.

பாகிஸ்தானின் முன்னணி வங்கியான ஹபிப் வங்கி ஏன் நியூயார்க்கில் தனது கிளையை மூடி, லட்சக்கணக்கிலான டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது என்பதை விவரிக்க முடியுமா.

தீவிரவாதிகளுக்கு நிதியுதவியை தடுக்கும் அமைப்பு பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பி 27 விதிமுறைகளில் 20 விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறியிருக்கிறதே அதற்கு விளக்கம் தரமுடியுமா, மறுக்க முடியுமா.

முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் ஜென்டில் மேன் கேம் விளையாடியவர். கடந்த 1947-ம் ஆண்டில் பாகிஸ்தானில் 23 சதவீதம் அளவுக்கு சிறுபான்மையினர் இருந்த நிலையில் இன்று 3 சதவீதமாகக் குறைந்துவிட்டார்கள். கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், அகமதியர்கள், ஷியா, பஸ்தூன்ஸ், சிந்தி, பலூச்சிகள் ஆகியோர் கொடூரமான சட்டங்களால், அப்பட்டமான விதிமீறல்களால், மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு விதிஷா மைத்திரா தெரிவித்தார்