கொளத்தூர் தொகுதி மாணவ-மாணவிகளுக்கு நல உதவி – மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

329 0

கொளத்தூர் தொகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நல உதவிகளை வழங்கினார்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்த நேரத்தில் பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை மனுவாக அளித்திருந்தனர்.

அதன் அடிப்படையில், அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூர், ரங்கசாயி தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சந்தர்ராவ் மகன் சி.ரஞ்சித்குமாருக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.25 ஆயிரமும், பெரம்பூர், ரங்கசாயி தெருவைச் சேர்ந்த தயாளன் மகள் பத்மஸ்ரீக்கு (பி.காம் மாணவி), ரூ.25 ஆயிரமும், வெற்றிநகர், பூபதி தெரு, ரதி சீனிவாசனின் மகள் சி.ஜனனிக்கு மடி கணினியும் வழங்கினார்.

மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்ற உலகளவிலான கராத்தே சாம்பியன் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.ஜஷ்வினி அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை கிழக்கு மாவட்டம், த.மா.கா. கட்சியின் மாநில இளைஞர் அணி முன்னாள் செயலாளர் எஸ்.ஏ.ஜாவீத் காதிர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில், சந்தித்து, தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.

அவருடன், த.மா.கா. வட்ட முன்னாள் துணைச் செயலாளர்கள் கபீர், பகுதி முன்னாள் பிரதிநிதி என்.அஸாத்கனி, வர்த்தகர் அணி முன்னாள் இணைச் செயலாளர் பி.ஐ.ஜமீல்அகமது, முன்னாள் வட்ட இளைஞர் அணி சம்சுல் அரிப் மற்றும் அமுல்தாஸ், பாண்டியன், முகமது பாரூக், டில்லிபாபு, புகாரி, அன்புராஜ், மன்சூர், அன்சாரி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்

இந்த நிகழ்ச்சியில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., கொளத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் ஐ.சி.எப். முரளிதரன், கொளத்தூர் மேற்கு பகுதி செயலாளர் ஏ.நாகராஜன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.மகேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.