நான் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியுள்ள இந்தப் பயணமானது புதிய யுகமொன்றின் ஆரம்பமாகும். அதனை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். இது தனிப்பட்ட பிரிவினரையும் அவர்களது நலன்களையும் மையப்படுத்தியதல்ல. சஜித் பிரேமதாஸ ஆகிய நான் எவருடைய நிபந்தனைக்கும் கட்டுப்படமாட்டேன் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். என்னுடைய தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக நிபந்தனைகளை ஏற்று செயற்பட மாட்டேன் என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எனது இந்தப் பயணமானது தனிப்பட்ட பிரிவினரையும், அவர்களது நலன்களையும் மையப்படுத்தியதல்ல. மாறாக நாட்டு மக்களின் நலன்களை முன்னிறுத்திய பயணமாகும். மற்றவர்களைப் போன்று தேர்தலுக்காக செல வழிப் பதற்கு என்னிடம் டொலர்கள் இல்லை. என்னிடம் இருப்பதெல்லாம் மக்களின் ஆதரவு மாத்திரமே என்றும் அவர் கூறினார்.
கொழும்பில் உள்ள அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நான் பெயரிடப்பட்ட பின்னர், ஏற்கனவே வெவ்வேறு காரணங்கள் மற்றும் பிரச்சினைகளால் கட்சியிலிருந்து விலகிச்சென்றவர்களை மீண்டும் எம்மோடு இணைந்து கொள்ளுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தேன். அதனூடாக எதிர்வரும் அக்டோபர் 10 ஆம் திகதியிலிருந்து நாட்டினதும், மக்களினதும் நலனை முன்னிறுத்திய புதிய பயணமொன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது.
அதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.பி.நாவின்ன கடந்த சிலகாலமாக கட்சியின் செயற்பாடுகளிலிருந்து விலகியிருந்த போதிலும், தற்போது மீண்டும் எம்மோடு இணைந்துகொண்டு எமக்கு ஆதரவினை வழங்குவதற்கு முன்வந்திருக்கின்றார். நாமனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் சுபீட்சமான எதிர்காலமொன்றை முன்னிறுத்தி ஒன்றிணைந்து பயணிக்கவிருக்கிறோம்.
கேள்வி : சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே உங்களை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரான அகிலவிராஜ் காரியவசம் கூறியிருந்தார். அத்தகைய நிபந்தனைகள் எவையேனும் உள்ளதா?
பதில் : எவ்விதமான நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை. எமது கட்சியின் பொதுச்செயலாளரும் அத்தகைய கருத்து எதனையும் கூறியதாக நான் அறியவில்லை. சஜித் பிரேமதாஸ ஆகிய நான் எவருடைய நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட மாட்டேன் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். என்னுடைய தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக நான் ஒருபோதும் நிபந்தனைகளை ஏற்றுச் செயற்பட மாட்டேன்.
கேள்வி : அவ்வாறெனின் நீங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்தால் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவே தொடர்வாரா?
பதில் : இதற்கு ஏற்கனவே நான் பதில் கூறியிருக்கிறேன். இது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலே தவிர, பிரதமரை நியமனம் செய்வதற்கான தேர்தல் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
கேள்வி : நீங்கள் ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து, சில பகுதிகளில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?
பதில் : இத்தகைய அசம்பாவித சம்பவங்கள் சமூகத்தில் உள்ள இனவாதிகளால் தூண்டிவிடப்பட்டதாகவே நான் கருதுகின்றேன். இலங்கை மக்கள் அனைவரும் முதலில் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இனவாத செயற்பாடுகள் எப்போதும் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்குக் கேடு விளைவிப்பதாகவே அமையும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அனைவரும் சகோதரத்துவம் என்ற விடயத்தைப் பிரதானப்படுத்தி இன, மத, குலபேதங்கள் எவையுமின்றி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
கேள்வி : உங்களை போட்டிக்குரிய ஒரு வலுவான வேட்பாளராகக் கருதவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். அதுகுறித்து உங்களுடைய நிலைப்பாடு என்ன? அதேபோன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் கோத்தபாய ராஜபக்ஷவை எதிர்கொள்வது சவாலானது என்று கருதுகின்றீர்களா?
பதில் : அரசியலைப் பொறுத்தவரையில், அதில் என்னுடைய அனுபவம் என்பது மிகவும் உயர்வானது. இவர்களைப்போன்ற சிறுபிள்ளைத்தனமான அனுபவமல்ல அது என்பதை உணரவேண்டும். என்னை பொறுத்த மட்டில் நாட்டில் அமைதியையும், சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதே சவாலான விடயமாகும். அதேபோன்று அவையிரண்டும் நாட்டில் வாழும் குறித்தவொரு பிரிவினருக்கு மாத்திரமானதன்றி, அனைத்துத் தரப்பினரையும் சமளவில் சென்றடைவதாக இருக்க வேண்டும். அத்தோடு பொருளாதார வளர்ச்சியும் அனைத்து மக்களாலும் அடையப்படக் கூடியவகையில் சமச்சீரானதாக இருக்க வேண்டும்.
கேள்வி : இம்முறை ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் உங்களுடைய கொள்கைப் பிரகடனம் எவ்வாறானதாக அமையும்?
பதில் : எனது கொள்கைப் பிரகடனமானது நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னிறுத்தி, எந்தவொரு இன, மத, மொழி, குலபேதங்களுமின்றி, மக்களுக்கு நன்மையளிக்கத்தக்க வகையில் காலவரையறையைக் கொண்டதாக அமையும்.
கேள்வி : இம்முறைத் தேர்தல் பிரசாரத்தில் நீங்கள் எத்தகைய உத்தியைக் கையாளப்போகின்றீர்கள்?
பதில் : என்னுடைய உத்தி இதுதான் என்று நானே கூறுவது நன்றாக இருக்காது. நான் எவ்வாறான உத்தியைக் கையாள்கிறேன் என்று நீங்கள் பொறுத்திருந்து பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
கேள்வி : தற்போது உங்களுடன் எஸ்.பி.நாவின்ன இணைந்து கொண்டதைப் போன்று வேறு யாரேனும் எதிர்காலத்தில் இணைந்துகொள்வார்களா?
பதில் : என்னுடைய கொள்கை மற்றும் செயற்பாடுகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற நிலைப்பாட்டைக் கொண்ட அனைத்து தரப்புக்களுடனும் இணைந்து செயற்படுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன். எனினும் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டு, அக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டவர்களை இணைத்துகொள்ள மாட்டேன். அதனை ஊக்குவிக்கவும் மாட்டேன்.
நான் நாட்டினதும், மக்களினதும் நலன்களைக் கருத்திற்கொண்டு மாத்திரமே செயற்படுவேன். நான் அரசியலில் ஈடுபடுகின்ற காரணத்தால் எனது அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி என்னுடைய உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று எவரையும் அரச உத்தியோகங்களில், அரச நிறுவனங்களில் இணைத்துக்கொண்டதில்லை. இந்த நாட்டுமக்கள் தான் என்னுடைய சொந்தங்கள்.
கேள்வி : அவ்வாறெனின் ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று கருதுகின்றீர்களா?
பதில் : ஆம் நிச்சயமாக. ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றியடைவேன் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. மக்களின் நம்பிக்கையும், ஆதரவும் எனக்கு இருக்கின்றது. சஜித் பிரேமதாஸ ஆகிய நான் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள இந்தப் பயணமானது புதிய யுகமொன்றின் ஆரம்பம் என்பதை நாட்டு மக்களனைவரும் அறிந்திருக்கின்றார்கள். எனினும் இது தனிப்பட்ட பிரிவினரையும், அவர்களது நலன்களையும் மையப்படுத்தியதல்ல. மாறாக நாட்டு மக்களின் நலன்களை முன்னிறுத்திய பயணமாகும். மற்றவர்களைப் போன்று தேர்தலுக்காக செலவழிப்பதற்கு என்னிடம் டொலர்கள் இல்லை. என்னிடம் இருப்பதெல்லாம் மக்களின் ஆதரவு மாத்திரமே.
கேள்வி : எனின் நீங்கள் வெற்றிக்காக எந்த நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட மாட்டீர்களா?
பதில் : தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமது கொள்கை உள்ளிட்ட அனைத்தையும் விட்டுக்கொடுக்கின்ற ஒரு கலாசாரத்தையே நீங்கள் கண்டிருக்கிறீர்கள். ஆகையினாலேயே என்னிடமும் இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கின்றீர்கள். அதிலிருந்து சற்று விலகி வெளியே வாருங்கள்.
கேள்வி : நீங்கள் ஜனாதிபதியானால் சோஃபா, மிலேனியம் செலென்ஞ் கோப்பரேஷன் போன்ற சர்ச்சைக்குரிய உடன்படிக்கைகளின் கைச்சாத்திடுவீர்களா?
பதில் : இவ்வாறான சர்வதேசத்துடனான ஒப்பந்தங்கள் தொடர்பில் மீண்டும் அவதானம் செலுத்தப்பட்டு, முழுமையாக ஆராயப்படும். அதேவேளை அவற்றில் வெளிப்படைத்தன்மையும் பேணப்படும். அரசியல், பொருளாதார, சமூக, நிதியுதவித்திட்ட, பாதுகாப்பு உள்ளிட்ட வெளிநாடுகளுடனான எவ்வித ஒப்பந்தங்கள் என்றாலும் அவற்றின் அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்கள் தொடர்பில் முழுமையாக ஆராயப்படும். அதில் ஒரு குறித்த தரப்பிற்கோ அல்லது குடும்பத்திற்கோ அன்றி, முழு நாட்டிற்கும் அனுகூலங்கள் கிடைக்கப்பெறுமாயின் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவோம். இவையனைத்தும் அனைவரும் அறியக்கூடிய வகையில் பூரண வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படும்.
கேள்வி : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உங்களுக்கு ஆதரவு வழங்குமா?
பதில் : அதனை நீங்கள் அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
கேள்வி : நீங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்தால் முதலாவதாக எதனைச் செய்வீர்கள்?
பதில் : வரி செலுத்தும் மக்களின் பணத்தில் சுகபோகங்களை அனுபவிக்காமல் அதனை மிகக் குறைந்தளவில் பயன்படுத்தி, எஞ்சுவதை மக்களின் அபிவிருத்திப் பணிகளுக்காகப் பயன்படுத்துவேன். அதனையே ஜனாதிபதியானதும் முதலில் செய்வேன். ஜனாதிபதிக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அரச இல்லங்களிலோ, பங்களாக்களிலோ நான் தங்கமாட்டேன்.
கேள்வி : அவ்வாறெனின் எங்கு தங்குவீர்கள்?
பதில் : நீங்கள் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய கேள்வி ஒன்றை எழுப்புகின்றீர்கள். (சிரிக்கின்றார்) நான் எங்கு தங்குவேன் என்பதைக் கூறமுடியாது. ஆனால் அரசால் வழங்கப்படும் இல்லங்களில் தங்கமாட்டேன்.
கேள்வி : தற்போது வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக இருக்கின்ற நீங்கள் ஜனாதிபதியான பின்னரும் அதனைத் தொடர்வீர்களா? ஏனெனில் இன்னமும் பூர்த்தி செய்யப்பட வேண்டிய வீடமைப்புப் பணிகள் இருக்கின்றன.
பதில் : நான் ஜனாதிபதியான பின்னர் வீடமைப்பு மாத்திரமன்றி அனைத்து விடயங்கள் தொடர்பிலும் வெகுவாக அவதானம் செலுத்துவேன். அனைத்திற்கும் முக்கியத்துவம் வழங்குவேன்.
கேள்வி : தற்போதைய ஆட்சியிலேயே பல்வேறு நபர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வீர்கள்?
பதில் : ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான தனியான கட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டு, அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கேள்வி : தற்போது பல்வேறு துறைகளிலும் நடைபெறுகின்ற தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டங்கள் பற்றிய உங்களுடைய கருத்து என்ன?
பதில் : இவை மிகவும் அநீதியானவையாகும். வேலை நிறுத்தப் போராட்டங்களை மேற்கொள்வதற்கும், தமது கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் அவற்றில் ஒரு நியாயம் இருக்க வேண்டுமல்லவா? என்னைப் பொறுத்தவரை இந்த வேலைநிறுத்தப் போராட்டங்கள் அனைத்தும் எதிரணியினரின் தூண்டுதலினால் நடைபெறுகின்றவையே ஆகும்.

