நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் – மேலும் 3 மாணவர்கள் தந்தையுடன் கைது

235 0

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகார் தொடர்பாக மேலும் 3 மாணவர்கள் தங்களது தந்தையுடன் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகார் தொடர்பாக மேலும் 3 மாணவர்கள் தங்களது தந்தையுடன் கைது செய்யப்பட்டனர்.சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்த உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் மகனை டாக்டராக்கும் ஆசையில் குறுக்கு வழியை தேர்வு செய்து ஆள்மாறாட்டத்துக்கு துணை போனதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக கடந்த 18-ந்தேதி தேனி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நீட் தேர்வு மோசடி பின்னணியில் மிகப்பெரிய நெட்வொர்க் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

மோசடி விவகாரம் தெரிய வந்ததும் மாணவர் உதித்சூர்யா பெற்றோருடன் தலைமறைவானார். திருப்பதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கடந்த 25-ந்தேதி கைது செய்தனர். உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன், தாய் கயல்விழி ஆகியோரும் பிடிபட்டனர்.

இதில் வெங்கடேசனும், உதித்சூர்யாவும் விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை எழும்பூரில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் மற்றும் தேனியில் வைத்து இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்களை அவர்கள் வெளியிட்டனர்.
உதித்சூர்யா

தந்தை வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தில், “மகன் உதித்சூர்யாவை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மோசடியாக பல வேலைகளை செய்ததாக திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார். அப்போது கேரளாவைச் சேர்ந்த தரகர் ஜோசப் மூலமாக மும்பை தேர்வு மையத்தில் உதித் சூர்யாவுக்காக வேறொரு நபர் தேர்வு எழுதியதையும் அவர் ஒப்புக் கொண்டார். இதற்காக ரூ.20 லட்சம் பணம் கொடுத்ததாக டாக்டர் வெங்கடேசன் தெரிவித்தார்.

மாணவர் உதித்சூர்யா அளித்த வாக்குமூலத்தில் என்னை போன்று மேலும் பல மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து இருப்பதாக பரபரப்பான தகவலை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த மாணவர்கள் யார்-யார் என்பது பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது மேலும் 4 மாணவர்கள் உதித்சூர்யாவை போன்று மோசடியாக தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக நேற்று இரவு 3 மாணவர்கள் தங்களது தந்தையுடன் கைது செய்யப்பட்டனர். சென்னையைச் சேர்ந்த மாணவி அபிராமி, மாணவர்கள் பிரவின், ராகுல் ஆகியோர் ஆள்மாறாட்டம் மூலமாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரிகளில் படித்து வந்தது தெரிய வந்துள்ளது.

உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் மகனுக்காக மோசடி வேலைகளை அரங்கேற்றியது போன்றே இந்த 3 மாணவர்களின் தந்தைகளும் செயல்பட்டு உள்ளனர். இவர்களில் பிரவின் 23 லட்சம் ரூபாயை ஆள்மாறாட்டத்துக்காக கொடுத்துள்ளார். மற்ற இருவரும் ரூ.20 லட்சம் வரையில் பணத்தை வாரி இறைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த பணத்தை 3 பேரின் தந்தைகளும் சேர்ந்தே தரகர்களிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து மாணவி அபிராமியின் தந்தை மாதவன், மாணவர் பிரவினின் தந்தை சரவணன், ராகுலின் தந்தை டேவிஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்த 6 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆள்மாறாட்டம் தொடர்பாக இவர்களும் தங்களது குற்றங்களை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதையடுத்து சி.பி. சி.ஐ.டி. போலீசார் 3 மாணவர்களையும், அவர்களது தந்தைகளையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கிறார்கள்.

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் இதுவரையில் 4 மாணவர்களும், ஆள்மாறாட்டத்துக்கு பெரிதும் துணையாக இருந்த அவர்களது தந்தைகளும் கைதாகி இருப்பதன் மூலம் இதுவரை 8 பேர் சிக்கி உள்ளனர்.

இர்பான் என்ற மாணவரும் நீட் தேர்வை ஆள்மாறாட்டத்தில் எழுதி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த தரகர் ஜோசப் மாணவர் உதித்சூர்யாவுக்காக ஆள்மாறாட்டம் செய்வதற்கு திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் நேற்று திருவனந்தபுரத்தில் வைத்து சிக்கியதாக தகவல் வெளியானது. அவரை சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவரை போன்று மேலும் 2 தரகர்களும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பெங்களூரைச் சேர்ந்த ரபி, வாணியம்பாடியைச் சேர்ந்த முகமது‌ஷபி ஆகியோரும் நீட் ஆள்மாறாட்டத்துக்கு ஆட்களை தேர்வு செய்து கொடுத்து லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர். இவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.