சட்டவிரோத பேனர் விவகாரம்- மேலும் 4 பேரை கைது செய்தது தனிப்படை

213 0

சட்டவிரோத பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக மேலும் 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.சென்னையில் சாலையின் சென்டர்மீடியனில் வைக்கப்பட்டிருந்த பேனர் சாலையில் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான பீகாரை சேர்ந்த மனோஜ் (25). என்பவரை கைது செய்தனர்.

அனுமதியின்றி பேனர் வைத்ததாக அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் கமல்ராஜ் பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார். அதன்படி, சம்பந்தப்பட்டவர் கைதானாலும் ஜாமீனில் வெளியே வரக்கூடிய பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தாமாகவே முன் வந்து அவசர வழக்காக எடுத்துக் கொண்டு விசாரித்தது.

இதனால் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தலைமறைவானார். ஒரு வாரத்திற்குப் பிறகு அவரை நேற்று கிருஷ்ணகிரியில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் சென்னை கொண்டு வரப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக பழனி(50), சுப்பிரமணி(50) சங்கர்(35), லட்சுமிகாந்த்(38) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கொடி கட்டுவது, பேனர் வைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டதால் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.