ஜெயலலிதா நலம் பெற வேண்டி… அப்பல்லோவில் கோமாதா பூஜை!

278 0

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி இன்று அப்பல்லோ வாயிலில் அதிமுகவினர் கோமாதா பூஜை நடத்தினர்.

உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி இரவு முதல் அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.37 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்களும் பல்வேறு வகையான வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

gomatha

சென்னையில் உள்ள கட்சி நிர்வாகிகள் அப்பல்லோ மருத்துவமனைக்கு தினமும் வந்து வெளியில் பூசணிக்காய் உடைப்பது, தேங்காய் உடைப்பது, குங்குமபூஜை, குத்து விளக்கு பூஜை, மண்சோறு சாப்பிடுவது, அக்னி சட்டி எடுப்பது என்று விதவிதமான பூஜைகள் செய்கிறார்கள்.

அமைச்சர்களும் பல்வேறு கோயில்களில் பிரார்த்தனைகள், யாகங்கள், பால்குடம் என பிஸியாக இருக்கின்றனர். இஸ்லாமியர்களின் நோன்பும், கிறிஸ்தவர்களின் பிரார்த்தனையும் தினசரி அப்பல்லோ மருத்துவமனை முன்பு நடைபெறுகிறது.

gomatha3

அதிமுக மகளிர் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் தினம்தோறும் விதவிதமான பூஜைகள் நடத்தி வருகின்றனர். அதேபோல் அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டோர் குத்துவிளக்கு பூஜையில் தொடங்கி சாமியார்களின் சூலாயுத பூஜை வரை என தொடர் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பல்லோ முன்பு இன்று அதிமுகவினர் கோமாதா பூஜை நடத்தினர். தொண்டர்களும் மாலை அணிந்து வந்திருந்தனர். நிகழ்ச்சியில் மாடுகள் அலங்கரிக்கப்பட்டு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.