திருகோணமலை விகாரையில் புத்தர் சிலைகள் உடைப்பு

274 0

திருகோணமலையில் உள்ள விகாரை ஒன்றில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

உப்புவெளி பொலிஸ் பிரிவின் அபயபுர அபயாராம விகாரையில் உள்ள புத்தர் சிலைகளே இவ்வாறு இன்று (புதன்கிழமை) உடைக்கப்பட்டுள்ளன.

ஒரு சிலை உடைக்கப்பட்ட நிலையில் மற்றுமொரு சிலை கண்ணாடி பெட்டியில் இருந்து வெளியே எடுத்து சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பிற்பகல் தானம் ஒன்றிற்காக வெளியே சென்ற சந்தர்ப்பத்தில் உடைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதனை ஒருவர் தொலைபேசி மூலம் தெரிவித்ததாகவும் விகாராதிபதி மானின்கமுவே விமலஜோதி திஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உடனடியாக 119 என்ற பொலிஸாரின் அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவித்ததாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய உடனடியாக செயற்பட்ட உப்புவெலி பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த வருடம் மாவனல்ல பகுதியில் புத்தர் சிலை உடைப்பு சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இந்த உடைப்பு சம்பவத்தில் ஏப்ரல்-21 பயங்கரவாத தாக்குதல் பிரதானி சஹரானின் வழிகாட்டலிலான குழுவினரே ஈடுபட்டிருந்தனர் என்பது பயங்கரவாதத் தாக்குதலின் பின்னரான விசாரணைகளின் மூலம் தெரிய வந்தது.

இவ்வாறு புத்தர் சிலையை உடைத்ததாக சந்தேகிக்கப்பட்டு 14 பேர் கைதுசெய்யப்பட்ட விசாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.