சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்புக்கு கிழக்கிலும் ஆதரவு – முடங்கியது நீதிச் சேவை

362 0

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்களை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தி வடக்கு மாகாண சட்டத்தரணிகள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிழக்கிலும் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தின் நீதிமன்ற சேவைகள் முடங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை என கிழக்கு மாகாணத்தின் சகல மாவட்டங்களிலுள்ள சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கமைய கல்முனையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணிகள் கல்முனை நீதிமன்ற கட்டட தொகுதி முன்பாக கண்டன எதிர்ப்பு போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தனர்.

கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சட்டத்தரணி ஸாரிக் காரியப்பர் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த போராட்டத்தில், பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி சட்டத்தரணிகள் தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.

இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணிகள், நீதி சகலருக்கும் சமனாக கிடைக்க வேண்டும் என்றும் சட்டதரணிகளுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும்  வலியுறுத்தினர்.

இதேபோல மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், இன்று காலை ஆரப்பாட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது முல்லைதீவு நீராவியடியில் நீதிமன்ற கட்டளையினையும் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த சட்டத்தரணிகள், அச்சந்தர்ப்பத்தில் சட்டத்தரணிகள் இருவர் தாக்கப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கே.நாராயணபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டத்தரணிகள் கலந்துகொண்டனர்.

அதேபோல திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமழ் சட்டத்தரணிகளும் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் சிங்கள சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.