ராணுவ பலத்தைப் பெருக்கும் சீனா உலகிற்கு ஓர் அச்சுறுத்தல்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டம்

242 0

சீனா தனது ராணுவ செலவினங்களை 7% அதிகரித்து 152 பில்லியன் டாலர்களாக உயர்வடைந்ததையடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனா தனது ராணுவ பலத்தைக் கூட்டுகிறது, சீனா உலகிற்கே பெரிய அச்சுறுத்தல் என்று சாடியுள்ளார்.

தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்காவை அச்சுறுத்துவதற்காகவே ராணுவ பலத்தைக் கூட்டுகிறது சீனா என்று அதிபர் ட்ரம்ப் சாடியுள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கூறியதாவது:

நிச்சயமாக சீனா உலகிற்கு ஓர் அச்சுறுத்தலே. அமெரிக்காவிலிருந்து வர்த்தக ரீதியாக அங்கு செல்லும் தொகை ராணுவ பலத்தை அதிகரிக்கவே பயன்படுகிறது. முந்தைய அமெரிக்க அதிபர்கள் அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர்களைச் சீனா கொண்டு செல்வதை அனுமதித்தனர். சீனா நம் அறிவுசார் சொத்துரிமையை அபகரிப்பதை அவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தனர். நான் அப்படியல்ல.

இருநாடுகளும் இது தொடர்பாக நெருக்கமாக பேச்சு வார்த்தைகள் நடத்தினோம், ஆனால் கடைசியில் சீனா ஏற்றுக் கொள்ள மறுத்தது. நான் என்ன கூறினேன், சரி நான் உங்கள் பொருட்கள் மீதான கட்டணங்களை 25% அதிகரிக்கிறேன் என்றேன், இன்னும் அதிகரிப்பேன் என்றேன், இப்போது நம் கருவூலம் நிரம்பி வழிகிறது, 2 நாட்களுக்கு முன்பு வந்த அறிக்கையைப் பாருங்கள் உங்களால் நம்ப முடியாது. சீனாவிலிருந்து 100 பில்லியன் டாலர்கள் கணக்கில் நமக்கு வருவாய் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு இப்படி வந்ததா? ஆகவே சீனா ஒப்பந்தம் கோரி வருகிறது. நாமும் ஒப்பந்தம் மேற்கொள்ளவே விரும்புகிறோம்.

என்ன நடக்கிறது என்று பார்ப்போம், நான் சீனாவை பலவிதங்களில் பார்க்கிறேன். இப்போதைக்கு வர்த்தகம் மட்டுமே என் கவனம். வர்த்தகம் ராணுவத்துக்குச் சமம். சீனாவை நாம் தொடர்ந்து நம்மிடமிருந்து 500 பில்லியன் டாலர்களைக் கொண்டு செல்ல அனுமதித்தால் அது அந்நாட்டு ராணுவத்திற்குத்தான் செல்கிறது.

அவர்களுக்கு இந்த ஆண்டு மிக மோசமானது. 57 ஆண்டுகளில் இல்லாத சரிவைச் சந்தித்துள்ளது. அவர்கள் தங்கள் பொருளாதாரத்திற்குள் நிறைய பணத்தைக் கொட்டுகின்றனர். சீனாவில் 30 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். அவர்களது சப்ளை சங்கிலி உடைந்து விட்டது. நிறைய பிரச்சினைகள் உள்ளது, அதனால் ஒப்பந்தம் பேச வருகின்றனர். ஆகவே பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

இவ்வாறு கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.