அவன்கார்ட் தலைவருடன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் தொலைபேசியில் உரையாடினாரா?

198 0

அவன்கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதிக்கும் தனக்குமிடையில் அமைச்சர் ஒருவரே தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்தார் என இலஞ்ச ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தில்ருக்சி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பெண்ணொருவரும்  அவன்ட்கார்ட் தலைவரும் தொலைபேசியில் உரையாடும் பதிவொன்று வெளியாகி இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே தில்ருக்சி விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பெண்  தில்ருக்சி விக்கிரமசிங்க என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட தொலைபேசி உரையாடலில்  அவன்ட்கார்ட் நிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பெண்ணொருவர் தெரிவிக்கின்றார்.

நான் உங்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்திருக்கமாட்டேன் பலர் இதனால் வேலை இழக்கவேண்டியிருக்கும் என்பது குறித்தும் அவர் தெரிவிக்கின்றார்.

சட்டத்தை எப்படி உடைக்கவேண்டும் என்பதும் எவ்வாறு உருவாக்கவேண்டும் என்பதும் எனக்கு தெரியும் என  பெண் குரல் தெரிவிக்கின்றது.

இதேவேளை இன்று தனது முகநூலில் கருத்தொன்றை பதிவு செய்துள்ள  தில்ருக்சி விக்கிரமசிங்கஅரசாங்க அதிகாரி என்ற அடிப்படையில் தனக்கு பகிரங்கமாக கருத்து கூறுவதற்கும் செய்தியாளர் மாநாட்டினை நடத்துவதற்கும் அனுமதியில்லை என தெரிவித்துள்ளார்

இதேவேளை அவன்கார்ட் நிறுவனதலைவர் நிசங்க சேனாதிபதியை எந்த வித மாற்றங்களையும் மேற்கொள்ளாமல் குறிப்பிட்ட தொலைபேசி உரையாடலை வெளியிடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நிசங்க சேனாதிபதி எந்த அமைச்சரை தொலைபேசியில் அழைத்தார் என்பதையும் ஏன் அந்த அமைச்சர் தன்னிடம் தொலைபேசியை வழங்கினார் என்பதையும் பொதுமக்களிற்கு பகிரங்கமாக தெரிவிக்குமாறு தில்ருக்சி விக்கிரமசிங்க நிசங்க சேனாதிபதியை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை இந்த தொலைபேசி உரையாடல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

முதலில் தொலைபேசி உரையாடல் உண்மையானதா என்பதை  விசாரணை செய்யவேண்டும் என நீதியமைச்சர் தலதா அத்துக்கோரளை தெரிவித்துள்ளார்.