பொதுமக்களை சித்திரவதை செய்யும் 50 பயங்கரவாத விசாரணை பிரிவினரின் பெயர் விபரங்கள்!

278 0

இலங்கையின் பயங்கரவாத விசாரணை பிரிவை சேர்ந்த ஐம்பது பேர் சித்திரவதை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இது குறித்த பல தகவல்களை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பயங்கரவாத விசாரணை பிரிவு குறித்த தனது புதிய விசாரணை அறிக்கையிலேயே சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இந்த குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது அறிக்கையில் சித்திரவதைகளில் ஈடுபடும் 58 பேரின் பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளது.

இவர்களில் பலர் அதிகாரிகள் நிலையிலுள்ளனர்  என தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு சித்திரவதைகளிற்கு உட்பட்ட 78 பேரின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து இந்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஐக்கியநாடுகள் அறிக்கையில் பல வருடங்களிற்கு முன்னர் பெயர் குறிப்பிடப்பட்ட காவல்துறை அதிகாரிகளும் சித்திரவதைகளில் ஈடுபட்டுள்ளனர் ,இவர்களில் ஒருவர் ஐக்கியநாடுகள் அமைதிப்படையில் பணிபுரிந்துள்ளார் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கடந்த ஆண்கள் பெண்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட சித்திரவதை நடவடிக்கைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் குறித்து தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு பூசா மற்றும் கொழும்பு தடுப்பு முகாம்களை அடிப்படையாக வைத்தே தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களுடன் சித்திரவதைகளில் ஈடுபட்டவர்களின் பெயர் விபரங்கள் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் முகாம்களில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும்,வெள்ளை வானில் கடத்தப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு சித்திரவதை சாதனங்கள் இரத்தக்கறைகள் காணப்பட்ட அறைகளில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் செய்யாத விடயங்களை செய்ததாக ஏற்றுக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானோம் சித்திரவதைகளை வெளியில் தெரிவிக்க வேண்டாம் என தெரிவித்தனர் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.