நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்வதற்கு அரசாங்கம் அமைச்சரவையில் யோசனையினை முன்வைக்கவுள்ளது. நாட்டு மக்களை அரசியல் ரீதியில் ஏமாற்றும் ஒரு செயலாகவே இது கருதப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் இடம் பெறவுள்ள நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்ய முயல்வது நகைப்புக்குரியது என எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுகருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் தற்போது எழுந்துள்ள தேசிய பிரச்சினைக்கு ஜனாதிபதி தேர்தலின் ஊடாகவே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும். ஆகவே அனைத்து தரப்பினரின் கவனமும் ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை இலக்காகக் கொண்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டது. இன்று அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அறிவிக்க உள்ள நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்வதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி தேர்தல் இடம் பெறவுள்ள நிலையில் , நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்ய முயல்வது பயனற்றதாகும்.
ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு அரசாங்கம் தற்போது அரச வளங்களை தமது தேவைக்கேற்ப பயன்படுத்த முயற்சிக்கின்றது.அரசியல் ரீதியிலான நியமனங்கள், பதவி உயர்வுகள் ஆகியன வழங்கப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் தேர்தல் தொடர்பில் மக்களின் சிந்தனைகளை திசை திருப்புவதாகவே அமையும். ஆகவே இவ்விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கெஹ லிய ரம்புக்வெல குறிப்பிடுகையில்,
அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டுமாயின் ஐக்கிய தேசிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளின் ஆதரவு அவசியம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியது.
ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் போது கட்சியில் அங்கத்துவம் செலுத்தும் அனைத்து தரப்பினரது ஆதரவினையும் பெற வேண்டியது அவசியம். ஆனால் தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடு அவ்வாறு அல்ல. ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட வேண்டுமாயின் பங்காளிக் கட்சிகள் அனைத்தின் கோரிக்கைக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இணக்கம் தெரிவிக்க வேண்டும். இது எவ்வாறு சாத்தியப்படும். ஆளும் தரப்பி னரது முறையற்ற செயற்பாடுகள் இனங் களுக்கிடையில் பிளவினை ஏற்படுத்தும் விதமாகவே அமைகின்றன என்றார்.

