சொத்து, பொறுப்பு விபரங்களை வெளியிட்டார் அமைச்சர் ஹரீன்

202 0

சொத்து, பொறுப்பு விபரங்களை ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்காத எட்டு அமைச்சரவை அமைச்சர்கள் மீது ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததையடுத்து அந்த எட்டு அமைச்சர்களில் ஒருவரான தொலைத்தொடர்புகள், வெளிநாட்டுத்தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தனது சொத்து, பொறுப்பு விபரங்களை உடனடியாக ஜனாதிபதி செயலகத்தில் கையளித்திருக்கிறார்.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துவதற்கான சட்டத்தின் 4 ஆம் பிரிவின் பிரகாரம் அமைச்சரவை அமைச்சர்கள் தமது சொத்துக்கள், பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

எனினும் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாகப் பெற்றுக்கொண்ட தகவலின்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வரையில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 8 அமைச்சர்கள் தமது சொத்துக்கள், பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை சமர்ப்பித்திருக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையிலேயே சொத்து, பொறுப்பு விபரங்களை வெளியிடத்தவறிய அமைச்சரவை அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, ஹரீன் பெர்னாண்டோ, மனோகணேசன், எம்.எச்.ஏ.ஹலீம், அகிலவிராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, கயந்த கருணாதிலக மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகிய எட்டுப்பேருக்கு எதிராக ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் கடந்த செவ்வாய்கிழமை முறைப்பாடொன்றைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.