இந்தியாவின் ஒரு பகுதி தான் காஷ்மீர்: பாகிஸ்தான் மந்திரி குரேஷி

41 0

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷி, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

காஷ்மீரை இந்திய மாநிலம் என்று கூறாமல், இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் என்றே பாகிஸ்தான் இதுவரை கூறி வந்தது. இந்த நிலையில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷி, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் பங்கேற்ற குரேஷி நிருபர்களிடம் கூறுகையில், ‘காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கி உலகத்தை நம்ப வைக்க இந்தியா முயற்சி செய்கிறது. உண்மையிலேயே அங்கு இயல்புநிலை திரும்பி இருந்தால், சர்வதேச ஊடகங்கள், தொண்டு நிறுவனத்தினர், சமூக அமைப்பினரை இந்திய மாநிலமான (இந்தியாவின் ஒரு பகுதி) ஜம்மு-காஷ்மீருக்குள் அனுமதிக்காதது ஏன்?. அவர்களை அனுமதித்தால் உண்மை நிலை தெரிந்து விடும்’ என்று தெரிவித்தார்.

முன்னதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிய குரேஷி, காஷ்மீர் பிரச்சினை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தினார்.