உரிய நேரம் வரும் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்த தீர்மானத்தை நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
பதுளை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் பிரதமர் போட்டிட்டாலும் பிரச்சினையில்லை என கூறினார்.
வெற்றிக்கு கட்சியின் ஆசிர்வாதமும், மத்தியதர வரிசையின் ஒத்துழைப்பும் அவசியம் எனவும், ஒன்றிணைந்து செயற்பட்டால் வெற்றி நிச்சயம் எனவும் அவர் கூறினார்.
கட்சியின் தலைவர் என்ற வகையிலும் ஐ.தே.கவின் அவசியத்தை உணர்ந்தும் பிரதமர் அதனை நாட்டுக்கு அறிவிப்பார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்க முதிர்ச்சி பெற்றவர் என்ற வகையிலும், நாட்டை நேசிப்பவர் என்ற வகையிலும் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சிறந்த முடிவை எடுப்பார் என நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.

