நீக்கப்பட்டவர்களை சந்தித்து பேசிய வீடியோவை அ.ம.மு.க. வெளியிட்டது தவறு – புகழேந்தி

243 0

கட்சியில் இருந்து நீக்கியவர்களை சந்தித்து பேசிய வீடியோவை அ.ம.மு.க. ஐ.டி. பிரிவு வெளியிட்டது தவறு என்று புகழேந்தி கூறி உள்ளார்.அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர்களில் ஒருவரான பெங்களூரு புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவையில் அதிருப்தியில் இருந்த கட்சி நிர்வாகிகளை நான் சந்தித்து பேசினேன். கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தவர்களை கட்சியை விட்டு நீக்கி உள்ளனர். அவர்கள் தங்களது மனக்குமுறலை என்னிடம் வெளிப்படுத்தினர். இதனால் அவர்களை நேரடியாக சந்தித்து பேசினேன்.

அவர்களை சந்தித்து பேசிய வீடியோவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளது. இது என்னை அசிங்கப்படுத்துவதாக உள்ளது. பாதி வீடியோ மட்டும் வெளியிட்டு உள்ளனர். முழு வீடியோவையும் வெளியிட்டு இருந்தால் உண்மை தெரியும். வீடியோவை வெளியிட்டது எந்த விதத்தில் நியாயம்? கட்சிக்காக போராடி சிறை சென்றவர்களை நீக்கியதே தவறு. அவர்களை சமாதானப்படுத்த சென்று அவர்களிடம் நான் பேசியதை வெளியிட்டது மேலும் தவறு. சசிகலாவுக்காக தான் நாம் கட்சியில் இருக்கிறோம். எனவே வேறு கட்சிக்கு செல்ல வேண்டாம் என்று அவர்களிடம் நான் கூறினோம். இது தவறா?

இந்த வீடியோ வெளியிட்டபோதே கட்சி தலைமை என்னை நேரில் அழைத்து பேசி இருக்கலாம். ஆனால் அவ்வாறு பேசவில்லை. டி.டி.வி. தினகரனை ஊர் ஊராக அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தியதே நான்தான்.
டிடிவி தினகரன்

நான் வேறு கட்சிக்கு செல்ல நினைப்பதாக கருதி அந்த வீடியோவை வெளியிட்டதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நினைத்தால் அது தவறு.

சசிகலாவை நம்பியே நான் இந்த கட்சியில் இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

புகழேந்தி பேச்சு வேறு கட்சிக்கு செல்ல அவர் திட்டமிட்டு இருப்பதையே காட்டுவதாக வெற்றிவேல் கூறி இருப்பது குறித்து புகழேந்தியிடம் கேட்டபோது அவர் கருத்துக்கூற மறுத்து விட்டார்.