வெளிநாடுவாழ் தமிழர்களை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம்- முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

330 0

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன் வரும் ‘வெளிநாடுவாழ் தமிழர்களை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம்’ என்று அமெரிக்காவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த மாதம் 28-ந்தேதி இங்கிலாந்து சென்றார். லண்டனில் 4 நாட்கள் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

அங்கு 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

இங்கிலாந்து பயணத்தை1-ந்தேதி முடித்துக் கொண்டு லண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். தற்போது அமெரிக்காவில் நியூயார்க், சான்யூசே நகரங்களில் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார். இதையொட்டி மொத்தம் 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.

இதன் மூலம் 5,080 கோடி ரூபாய் முதலீடுகளும், 26 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.

நேற்று அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில், வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க ஏதுவாக “யாதும் ஊரே” என்ற திட்டத்தினை துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் சிறந்த மாநிலமாகிய தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் சிறப்பிக்கும்பொருட்டு, உலகெங்கும் வாழ்ந்து வரும் தமிழர்களின் சீரிய ஆலோசனைகளைப் பெறவும், தமிழ்நாட்டில் தொழில் துவங்க முன்வரும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம், உங்களைத் தேடி தமிழ்நாடு அரசு சார்பில் முதல் முறையாக பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல்-அமைச்சர் என்ற முறையில் நான் இங்கு வருகை தந்துள்ளேன்.

உலகெங்கும் வாழும் தமிழர்களை நினைத்திட, ஒரு புதிய உறவுப்பாலம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் “யாதும் ஊரே” என்ற புதிய திட்டத்தினை நியூயார்க்கில் துவக்கி வைத்தேன். தமிழ்நாடு அரசு தொழில் துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் இணையதளத்தில் “யாதும் ஊரே” என்ற தனித்தரவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்கள் முதலீடு, ஆலோசனைகள் நேரடியாக தமிழ்நாடு அரசை வந்தடையும்.

நீங்கள் தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறி ஒற்றைச் சாளர முறையில் அனைத்து அனுமதிகளும் வழங்கப்படும்.

முடியாததை முடியும் என சாதிக்கக்கூடிய திறமை படைத்தவர்கள் தமிழர்கள், அந்தச் சக்தி தமிழர்களுக்கு இருக்கின்றது. சாதிக்கப் பிறந்தவர்கள் தமிழர்கள். அப்படி சாதிக்கப் பிறந்தவர்கள் இங்கே சாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதேபோல தமிழகத்திலும் நீங்கள் சாதிக்கக்கூடிய நிலையை நீங்கள் உருவாக்கித் தர வேண்டும்.

ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி முதலீடு செய்து பெரிய தொழில் தான் செய்ய வேண்டும் என்ற நிலை கிடையாது, சிறிய, சிறிய தொழில்களில் முதலீடு செய்தால் கூட, அதற்கும் தமிழ்நாடு அரசு உங்களுக்கு துணை நிற்கும் என்று இந்த நேரத்தில் அழைப்பு விடுக்கின்றேன்.

இன்றைக்கு நாங்கள் அமெரிக்காவில் வந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றபொழுது, இந்தியாவில், முதன்மை இடத்தில் தமிழகம் வரவேண்டும் என்று தான் நினைத்தோம். ஆனால் உங்களையெல்லாம் பார்த்து பேசியபொழுது, உலக அளவிலேயே தமிழகத்தை முதன்மை இடத்தில் கொண்டுவர முடியும் என நம்பிக்கை பிறந்துள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்களும், உங்களுடைய நண்பர்களும் தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு முன் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றேன். இந்த நாட்டிலே நீங்கள் இருந்தாலும், உங்கள் உள்ளம் எல்லாம் தமிழ்நாட்டில் தான் இருக்கும். ஆகவே, தாய் தமிழகத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளை நல்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.