மசூத் அசார் உள்ளிட்ட 4 பேரை புதிய சட்டப்படி பயங்கரவாதிகளாக அறிவித்ததற்கு அமெரிக்கா ஆதரவு

342 0

மசூத் அசார், ஹபீஸ் சயீத் உள்ளிட்ட 4 பேரை புதிய சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவித்ததற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது.இந்தியாவின் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 1967-ன் கீழ், ஒரு இயக்கத்தை மட்டுமே பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க வழி இருந்தது. எனவே தனி நபரையும் பயங்கரவாதியாக அறிவிக்க வழி செய்யும் வகையில் இந்த சட்டம் சமீபத்தில் திருத்தப்பட்டது.

இந்த புதிய சட்டப்படி ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசார், லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபிஸ் சயீத், மும்பை தாக்குதல் குற்றவாளி ஜாகியுர் ரகுமான் லக்வி, நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் ஆகிய 4 பேரை பயங்கரவாதிகள் என மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.

புதிய சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட முதலாவது நபர்கள் இந்த 4 பேரும் ஆவர். இதன் மூலம் மேற்படி தனிநபர்களுக்கு எதிராக பயணத்தடை, சொத்து முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பொறுப்பு துணை செயலாளர் ஆலிஸ் ஜி.வெல்ஸ் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘மசூத் அசார், ஹபிஸ் சயீத், ஜாகியுர் ரகுமான் லக்வி, தாவூத் இப்ராகிம் ஆகிய 4 பிரபல பயங்கரவாதிகளை புதிய சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளாக அறிவித்த நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து மேற்கொள்ளும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான சாத்தியக்கூறுகளை இந்த புதிய சட்டம் விரிவடையச்செய்யும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேற்படி 4 பயங்கரவாதிகளும் ஐ.நா. சபையால் சர்வதேச பயங்கரவாதிகள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதைப்போல அமெரிக்காவும் இவர்களை பயங்கரவாதிகள் என அறிவித்து இருப்பதுடன், அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு பாகிஸ்தானையும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.