மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் கடந்த அரசில் அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது -லக்ஷ்மன்

225 0

எமது அரசாங்கத்தால் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் வழங்கியதில்லை. அதுதொடர்பில் உறுதியாக தெரிவிக்கின்றேன்.

ஆனால் கடந்த அரசாங்கத்தில் அதிகமானவர்களுக்கு இவ்வாறு வழங்கப்பட்டிருந்தது என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்த்தன ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்த்தன ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் இருக்கும் 225 உறுப்பினர்களில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரம் இருப்பதாகவும் 75பேருக்கு  மண் வெட்டுவதற்கு மற்றும் விநியோகிப்பதற்கான அனுமதிப்பத்திரம் இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் ரன்ஜன் ராமநாயக்க உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளதாக அரச பத்திரிகை ஒன்றில் முதலாவது பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜாங்க அமைச்சர் ஒருவர் உயர் நீதிமன்றில் பெயர் குறிப்பிடாமல் இவ்வாறு தெரிவித்திருப்பது பாராளுமன்றத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களதும் கெளரவத்துக்கு பாதிப்பாகும். இதுதொடர்பாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.