நாட்டின் இறைமையை பாதிக்கும் எந்தவொரு சர்வதேச ஒப்பந்தங்களும் தேவையில்லையென பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கோட்டா மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் தங்களது கலாசாரத்தை பாதுகாப்பதற்காக செயற்படுகின்றனர்.
ஆனால் நாம் இனம் குறித்து பேசினால் இனவாதத்தை தூண்டுவதாக எங்களை சித்தரித்து விடுகின்றனர்.
ஆசிய நாடுகள் தமது நாட்டின் கௌரவத்தையும் இறைமையையும் பாதிக்காத வகையிலேயே வளர்ச்சியடைந்த நாடுகளுடன தொடர்பினைப் பேணி வருகின்றன.
அவ்வாறு நாமும் சிந்தித்து செயற்பட்டால், பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால், மாறாக வர்த்தக உடன்படிக்கைக்காக நாட்டின் இறைமையை காட்டிக்கொடுக்கவோ அரசியல் ரீதியான முக்கிய விடயங்களைக் காட்டிக்கொடுக்கவோ ஒப்பந்தங்களில் கைச்சாத்திவதனை ஒருபோதும் ஏற்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

