உத்தேச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் வேட்பாளரையே களமிறக்குவோம். மக்களால் புறக்கணிக்கப்படும் ஒருவரை ஒருபோதும் களமிறக்கமாட்டோம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரை களமிறக்கி வெற்றிப் பெற செய்து கடந்த ஐந்து வருட காலத்தில் ஊடாக வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். பங்காளி கட்சிகளை ஒன்றுப்படுத்தி செயற்படும் எதிர்பார்ப்புடன் புதிய கூட்டணி பலம்மிக்கதாக உருவாக்கப்படும்.
கடந்த காலங்களில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஒரு குடும்பத்தை மையப்படுத்திய பெயர்கள் குறிப்பிடப்பட்டன. களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஜனநாயகத்தை கடைப்பிடிக்காத ஜனநாயக கொள்கையற்றவர். அரசியல் அனுபவம் இல்லாதவர் ஒருபோதும் ஜனநாயகத்தை பின்பற்றமாட்டார். நிச்சயம் நாட்டு மக்கள் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை புறக்கணிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
குளியாபிடிய நகரில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

