ஹிஸ்புல்லாவுக்கு நட்டயீடாக ஐந்து சதம் கூட செலுத்தப் போவதில்லை – அதுரலிய

258 0

சிறைப்பிடித்தால் கூட செலுத்துவதற்கு என்னிடம் பணம் இல்லை. இவ்வாறானவொரு நிலையில்  ஹிஸ்புல்லாவுக்கு  நட்டயீடு வழங்குவதற்கான எந்த அவசியமும் எனக்கு இல்லை. மாறாக இந்த  பல்கலைகழகம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள வழக்கை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள சதாம் செவன பௌத்த மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ;

மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகத்துக்கான காணியானது தொழில் பயிற்சி நிலையத்தை அமைப்பதற்கென்றே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் காலப்போக்கில் இந்த நிறுவனத்தின் நோக்கங்கள் மாற்றமடைந்துள்ளன. முன்னாள் ஆளுனர்  ஹஸ்புல்லாவின் மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகம்  சட்டத்துக்கு புறம்பானது என்பதனை பலமுறை வலியுறுத்தியுள்ளோம். தற்போது  இந்த தனியார் கல்வி நிறுவனத்தின் விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் கடந்த மாதம் 19 ஆம் திகதி மட்டகளப்பு தனியார் பல்கலைகழகத்தை அரச உடமையாக்குமாறு கோரி மட்டக்களப்பு பிரதேசத்தில் பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தோம். இதன்போது மக்களிடம் துண்டு பிரசுரங்களும் கையளிக்கப்பட்டிருந்தன. இந்த மக்கள் பேரணி நடவடிக்கைளின் போது மக்களுக்கு வழங்கப்பட்ட அந்த துண்டு பிரசுரத்தினால்  ஹிஸ்புல்லாவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக 200 மில்லியன் ரூபா நட்டயீட்டினை செலுத்துமாறு கோரி சட்டத்தரணி ஊடாக  கடிதமொன்றை எனக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த பல்கலைகழகம் தொடர்பில்  பாராளுமன்ற விவாதமொன்றும் இடம்பெற்றிருந்தது. இதன்போது  மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகத்துக்கான காணியை பெற்றுக்கொண்ட விதம் தொடர்பில்  தெளிபடுத்தப்பட்டிருந்தது. ஆளும் கட்சி உறுப்பினர்கள் உட்பட எதிர்தரப்பு உறுப்பினர்களும்  இந்த பல்கலைகழகம் சட்டத்துக்கு புறம்பானதை வலியுறுத்தி பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தார்கள். அவ்வாறாயின்  அவர்களுக்கும் இவ்வாறு கடிதம் அனுப்பி வைக்க வேண்டியது அவசியமாகும்.

ஹிஸ்புல்லாவின் இந்த தனியார் பல்கலைகழகம் தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் நான் அவருக்கு நட்டயீடாக ஐந்து சதம் கூட செலுத்தப் போவதில்லை. முதலில் இந்த பல்கலைகழகத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை உடனடியாக விசாரணைக்குட்படுத்த வேண்டும். எனக்கு கடித்தத்தினூடாக அறிவித்து எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. வழக்கு விசாரணைகளின் போது இது குறித்து அவர் சட்டத்துக்கு முன் பதிலளிக்க வேண்டியது அவசியமாகும்.