ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஒருமித்த தீர்மானத்திற்கு வருமாறு ஹிருணிகா அழைப்பு!

264 0

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஒருமித்த தீர்மானத்திற்கு வருமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர கேட்டுக் கொண்டார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளிட்ட அவர், இவ்வாறு பலரும் பலதரப்பட்ட கருத்துக்களை கூறுவதனால், நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்த விடயம் அசெளகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது என்று கூறினார்.

மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிப்பார்கள், ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் ஒரு நபரை தான் ஒருபோதும் ஆதரிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரியை ஆதரித்தால் தமது கட்சிக்கு கிடைக்கும் வாக்குகளைக்கூட இழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

அத்தோடு எதிர்க்கட்சியினர் எந்த வேட்பாளரை களமிறக்கினாலும் ஐக்கிய தேசிய முன்னணியே தேர்தலில் வெற்றி பெறும் என ஹிருனிகா பிரேமச்சந்திர கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சமீபத்தில் அங்கீகரிக்கப்படாத பத்து கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியிடம் மிகப்பெரிய வாக்காளர்களை கொண்ட கட்சிகள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை எந்தவொரு கட்சியும் தேர்தலில் தனியாக நின்று வெற்றி பெற முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர கூறினார்.