நாட்டை கட்டியெழுப்பும் எதிர்கால கொள்கை திட்டங்களை மக்களுக்கு அறிவிக்காமல் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனநாயக தேசிய முன்னணிக்கான உத்தேச யாப்புக்கான சகல திருத்தங்களும் முழுமையடைந்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சி உட்பட கூட்டணியில் இணையவுள்ள சகல கட்சிகளினதும் அடையாளத்தை பாதுகாத்தே புதிய கூட்டணி அமைக்கப்படும். புதிய கூட்டணியின் கொள்கைத்திட்டம் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் ஆகிய இரண்டும் கைவசம் உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
அங்கும்புர அலவலதுவல வீதி மற்றும் அங்கும்புர பேருந்து தரிப்பிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலந்துக் கொணடு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்களோடு நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் உட்பட சுற்றுலா துறை என சகலதும் வீழ்ச்சியடையும் என்று அநேகமானவர்கள் கருத்து வெளியிட்டார்கள். இருப்பினும் பாதுகாப்பு பிரிவினரால் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை இரண்டு மாத காலப்பகுதிக்குள் கைது செய்யக் கூடியதாக இருந்து. அந்த தாக்குதல் சம்பவங்களை அடுத்து தற்போது பொருளாதாரம் படிபடியாக உயர்வடைந்துள்ளது.
ஆகவே இந்த வருட இறுதிக்குள் சுற்றுலா பயணிகளின் வருகை 20 இலட்சத்தால் அதிகரிக்கும் என்றும் பிரதமர் இதன்போது கூறினார்.

