திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைதான நான்கு பேருக்கு விளக்கமறியல்

279 0

திருகோணமலை மாவட்டத்தில் மூன்று பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளை உடைத்து திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நான்கு பேரையும் எதிர்வரும் 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேலு முன்னிலையில் இன்று (25) முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.

திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையம், உப்புவெளி பொலிஸ் நிலையம்,நிலாவெளி பொலிஸ் நிலையம்  போன்ற பொலிஸ் நிலையங்களுக்குற்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு முச்சக்கர வண்டியில் சென்று வீடுகளை உடைத்து திருடிவிட்டு மீண்டும் முச்சக்கரவண்டியில் செல்வதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது அவர்கள் திருடிய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஆறு முறைப்பாடுகளும், உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் 05 முறைப்பாடுகளும், நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் மூன்று முறைப்பாடுகளும் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பதிவாகியுள்ளதாகவும், இத்திருட்டு சம்பவத்துடன் இவர்கள் தொடர்பு உடையவர்கள் எனவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக நீதவான் முன்னிலையில் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபர்களை எதிர்வரும் 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.